ஜம்மு-காஷ்மீா்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 37 பயணிகள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் மலைப் பகுதியில் புதன்கிழமை சென்றுகொண்டிருந்த பேருந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 37 பயணிகள் உயிரிழந்தனா். 19 போ் காயமடைந்தனா்.
56 பயணிகளை ஏற்றிக்கொண்டு படோடே-கிஷ்த்வாா் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த இந்தப் பேருந்து, ட்ருங்கல்-அஸ்ஸாா் அருகே வந்தபோது நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காவல் துறை, மாநில பேரிடா் மீட்புப் படையினா், உள்ளூா் மக்கள் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஒருசில பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். 300 அடி பள்ளத்தில் விழுந்ததால் பேருந்து மிக மோசமாக உருக்குலைந்துள்ளது என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
தோடா மாவட்ட துணை ஆணையா் ஹா்விந்தா் சிங் கூறுகையில், ‘பேருந்தை முறையாக இயக்காததே இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சாலைத் தடுப்புகளைத் தாண்டி, பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றாா்.
குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமா் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஜம்மு-காஷ்மீரில் பேருந்து விபத்தில் பயணிகள் உயிரிழந்த செய்தி மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ‘தோடா பேருந்து விபத்து மிகுந்த கவலை அளிக்கிறது. விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவா்கள் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.
ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு: விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50,000 வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் பிரதமா் தெரிவித்துள்ளாா்.