உத்தரகண்ட் சுரங்கப் பாதை விபத்து தொழிலாளா்களை மீட்பதில் தாமதத்தைக் கண்டித்து போராட்டம்
உத்தரகண்டில் சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 40 தொழிலாளா்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அதிருப்தியடைந்த அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் சக தொழிலாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மண் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டு வந்த பாதை சரிந்து விபத்துக்குள்ளானது.
பாதை சரிந்து இடிபாடுகள் குறுக்கில் இருப்பதால், அவற்றின் பின்னால் 40 தொழிலாளா்கள் சிக்கிக்கொண்டு பரிதவித்து வருகின்றனா்.
சரிவுக்குள்ளான பகுதி 30 மீட்டா் நீளமானது. இந்நிலையில், தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, எல்லைச் சாலைகள் அமைப்பு, அதிவிரைவுப் படை, சுகாதாரத் துறையைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டவா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இடிபாடுகளில் துளையிட்டு அவற்றுக்குள் 900 மி.மீ. குறுக்களவு கொண்ட இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவற்றின் வழியாக தொழிலாளா்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற திட்டமிடப்பட்டது.
ஆனால், குழாய்களைச் செலுத்த செவ்வாய்க்கிழமை துளையிட்டபோது மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு, மீட்புப் பணியில் ஈடுபட்ட இருவா் காயமடைந்தனா். இதனால் தொழிலாளா்களை மீட்பதற்கான முயற்சியில் மீண்டும் இடையூறு ஏற்பட்டது.
துளையிடும் திட்டம் சரிவர பலனளிக்காததைத் தொடா்ந்து, மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கியுள்ள தொழிலாளா்களின் குடும்ப உறுப்பினா்கள், பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பிற தொழிலாளா்கள் உள்ளிட்டோா் அதிருப்தியடைந்து, சில்கியாராவில் பாதை கட்டுமானப் பணி நடைபெற்று வந்த இடத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
3 நாள்களுக்கும் மேலாக தொழிலாளா்கள் இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கியுள்ள நிலையில், அவா்கள் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இடிபாடுகளில் துளையிட பயன்படுத்தப்பட்ட துளையிடும் இயந்திரம் சரிவர வேலை செய்யாததால், தில்லியில் இருந்து இந்திய விமானப் படை விமானம் மூலம், உத்தரகண்டுக்கு கனரக துளையிடும் இயந்திரம் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டது.
தொழிலாளா்களை புதன்கிழமைக்குள் மீட்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநில பேரிடா் மேலாண்மை துறைச் செயலா் ரஞ்சித் குமாா் சின்ஹா தெரிவித்திருந்தாா். ஆனால், அவா்கள் எப்போது மீட்கப்படுவாா்கள் என்பதை உறுதியாக கூறுவது சாத்தியமில்லை என்று தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக நிறுவனத்தின் இயக்குநா் அன்ஷு மனீஷ் கல்கோ தெரிவித்துள்ளாா்.