டிசம்பரில் பெரியவர்களான அனைத்து சிங்கப்பூரர்களுக்கு $200 முதல் $800 வரை உதவித் தொகை.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள் சிரமத்தை ஏற்படுத்தி வருவதால் அதற்கு உதவும் வகையில் அரசாங்க உத்தரவாதத் தொகுப்பின்கீழ் இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
2024ல் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் இதற்குத் தகுதி பெறுகின்றனர். இதில் சிங்கப்பூரர்களின் சொத்து எண்ணிக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
சுமார் 2.9 மில்லியன் சிங்கப்பூரர்களை உள்ளடக்கிய பிரிவில் ஏறக்குறைய 2.5 மில்லியன் பேருக்கு கூடுதலாக 200 வெள்ளி வரை வழங்குதொகை வழங்கப்படும் என்று புதன்கிழமை அன்று நிதி அமைச்சு தெரிவித்தது.
2022ஆம் ஆண்டில் மதிப்பிடக்கூடிய வருமானம் $100,000 வரை உள்ள சிங்கப்பூரர்களுக்கு மட்டும் இந்தக் கூடுதல் தொகை வழங்கப்படும்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை சமாளிக்கவும் பொருள் சேவை வரி உயர்வின் சுமையை குறைக்கவும் சிங்கப்பூரர்களுக்கு உத்தரவாதத் தொகுப்பின்கீழ் அரசாங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதில் மெடிசேவ் பணம் நிரப்பு, சமூக மேம்பாட்டு மன்றத்தின் பற்றுச்சீட்டு போன்றவை அடங்கும். இந்தத் தொகுப்பின் ஒரு பகுதியாக டிசம்பர் மாத ரொக்கமும் வழங்கப்படுகிறது.
செப்டம்பர் 28ஆம் தேதி துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங், வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் 1.1 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள கூடுதல் ஆதரவு தொகுப்பை அறிவித்திருந்தார்.
சிங்கப்பூரர்களுக்கு, குறிப்பாக குறைந்த, நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கு அதிக ஆதரவு வழங்குவது இதன் நோக்கமாகும்.
மேம்படுத்தப்பட்ட உத்தரவாதத் தொகுப்பில் 800 மில்லியன் வெள்ளி உதவியும் உள்ளடங்கியிருக்கிறது. இதனுடன் சேர்த்து மொத்த உதவி தொகுப்பின் மதிப்பு பத்து பில்லியன் வெள்ளிக்கு மேல் அதிகரித்துள்ளது.
குடிமக்கள் தாங்கள் வழங்குதொகைக்கு தகுதி பெற்றுள்ளது குறித்து உத்தரவாதத் தொகுப்பின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் ‘சிங்பாஸ்’ பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னதாக வழங்குதொகை பெற விரும்புவோர் தங்களுடைய அடையாள அட்டை எண்ணை ‘பேநவ்’வுடன் ஞாயிற்றுக்கிழமைக்குள் இணைத்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அடையாள அட்டை-பேநவ் இணைக்கப்படாதவர்கள் தங்களுடைய டிபிஎஸ்/பிஓஎஸ்பி, ஓசிபிசி, யுஓபி வங்கிக் கணக்கு எண்ணை அதிகாரபூர்வ உத்தரவாதத் தொகுப்பு இணையப் பக்கத்தில் பதிவு செய்யலாம். நவம்பர் 27ஆம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு டிசம்பர் 13ஆம் தேதிக்குள் வழங்குதொகை கிடைக்க வாய்ப்புள்ளது.
‘GovCash’ சேவையைப் பயன்படுத்தும் குடிமக்கள் தீவு முழுவதும் உள்ள ஓசிபிசி ஏடிஎம் இயந்திரம் வழியாக குறிப்பு எண், அடையாள அட்டை எண் ஆகியவற்றைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கலாம். இதற்கு முக அடையாளத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். வழங்குதொகைக்கான குறிப்பு எண் டிசம்பர் 22ஆம் தேதியிலிருந்து அரசாங்கம் அனுப்பி வைக்கும். ஓசிபிசி ஏடிஎம் இயந்திரங்களிலிருந்து வழங்குதொகையை எடுக்க அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.