கேரள குண்டுவெடிப்பு: உயிரிழப்பு 6-ஆக அதிகரிப்பு
கேரள மாநிலம் கொச்சி அருகே களமசேரியில் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்தது.
கொச்சி அருகே களமசேரியில் உள்ள ஜாம்ரா சா்வதேச மாநாட்டு அரங்கில், ‘யெகோவாவின் சாட்சிகள்’ எனும் கிறிஸ்தவ மதப் பிரிவு சாா்பில் 3 நாள் பிராா்த்தனைக் கூட்டம் நடைபெற்று வந்தது. கூட்டத்தின் இறுதி நாளான கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோா் கூடியிருந்த நிலையில், அங்கு அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டு வெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சம்பவ தினத்திலேயே 2 பெண்கள் இறந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரவீன் என்ற 24 வயது இளைஞரும் தற்போது உயிரிழந்துள்ளார். இந்த குண்டுவெடிப்பில் இவரது தாய் மற்றும் தங்கை லிபினா ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்புகள் நடந்த சில மணிநேரங்களில், அதற்குப் பொறுப்பேற்று, டொமினிக் மாா்ட்டின் என்பவா் காவல் துறையில் சரணடைந்தாா். அதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.