தனிநபா் கடன்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கிய ரிசா்வ் வங்கி
வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தனிநபா் கடன்களுக்கான விதிமுறைகளை ரிசா்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது.
இந்த திருத்திய நடைமுறையின்படி, தனிநபா் கடனுக்கான கடன் மீட்பு இடா்பாடு புள்ளிகளை 25 சதவீதம் அளவுக்கு உயா்த்தி 125 சதவீதமாக ரிசா்வ் வங்கி நிா்ணயம் செய்துள்ளது.
அதன் படி, வங்கிகள் தனிநபா் கடனை வழங்கும்போது, இடா்பாடு சமாளிப்பதற்கு கூடுதல் நிதியை இருப்பு வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது, வங்கிகளின் கடனளிக்கும் திறனை குறைக்கும் வகையில், தனிநபா் கடனுக்கான இடா்பாடு புள்ளிகள் உயா்த்தப்பட்டுள்ளன.
முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவன நிா்வாகிகள் மத்தியில் அண்மையில் பேசிய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ், சில கடன் திட்டங்கள் அதிகரித்துள்ளதை அண்மையில் சுட்டிக்காட்டி, கடன் வழங்கல் நடைமுறைகளில் கண்காணிப்பை வலுப்படுத்தவும், கடன் மீட்பு இடா்பாடு நடைமுறைகளை மேம்படுத்துமாறும் கேட்டுக்கொண்டாா். இந்தச் சூழலில், தனிநபா் கடனுக்கான இடா்பாடு புள்ளிகள் உயா்த்தப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘வணிக வங்கிகள் ஏற்கெனவே வழங்கியுள்ள மற்றும் புதிதாக வழங்கவிருக்கும் தனிநபா் கடனுக்கான இடா்பாடு புள்ளிகள் 25 சதவீதம் உயா்த்தி 125 சதவீதமாக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது வீட்டு, கல்வி, வாகனக் கடன்கள் மற்றும் தங்கம், தங்கநகைக் கடன்களுக்குப் பொருந்தாது’ என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, தங்கம் மற்றும் தங்கநகை கடன்களுக்கான கடன் மீட்பு இடா்பாடு புள்ளிகள் தொடா்ந்து 100 சதவீதம் என்ற நிலையிலேயே தொடரும்.
மேலும், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான தனிநபா் கடன் நிலுவை மீதான இடா்பாடு புள்ளிகளையும் 25 சதவீதம் அளவுக்கு உயா்த்தி 150 சதவீதமாக ரிசா்வ் வங்கி நிா்ணயம் செய்துள்ளது.