நாட்டை வங்குரோத்தாக்கியது நாங்களல்லர்; நல்லாட்சி அரசே! – மஹிந்த குற்றச்சாட்டு.
“நாட்டை வங்குரோத்து நிலைக்குள்ளாக்கியது நாம் அல்லர். அன்றைய நல்லாட்சி அரசுக்குப் பங்காற்றிய தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களே காரணம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான் தோல்வியடைந்தபோது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 வீதமாக இருந்தது. ஆனால், நல்லாட்சி அரசின் பின்னர் 2020 ஆம் ஆண்டு மீண்டும் நாட்டைக் கைப்பற்றிய போது பொருளாதார வளர்ச்சி வீதத்தை 2 வீதமாகக் குறைத்தது ராஜபக்சக்களா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்களிடம் கேள்வி எழுப்புவேன்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கின்றேன். 2019 இல் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபயவின் அரசு தேர்தல் விஞ்ஞாபனத்தில் வரிகளைக் குறைப்பதாக உறுதியளித் திருந்தது. எமக்கு வழங்கப்பட்ட ஆணையின்படி செயற்பட்டு வரிகளை குறைப்பது எவ்வாறு பிழையானது?.
அரசாங்கத்தின் கொள்கை முடிவினால்தான் சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்ல வேண்டியதாகிவிட்டது. அதற்காக அவர்களின் வேலைத்திட்டத்தில் நாம் இணைந்து கொள்ளவில்லை.
வட் உள்ளிட்ட வரி குறைப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்ற கல்விமான்கள் நிதித்துறையின் நிதிப் பரிந்துரைகளின் பேரில் தற்போதைய அரசுக்கு எதிராக வீதிகளில் ஊர்வலம் நடத்தியதுதான் இங்கு வேடிக்கை.” – என்றார்.