உலகக் கிண்ணம் வென்ற ஆஸி. அணிக்கு ரணில் வாழ்த்து!

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் வெற்றி பெற்றமைக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த வாழ்த்துக்களைக் கூறியுள்ளனர்.
2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (19) இடம்பெற்றது.
இந்தியாவின் அஹமதாபாத் – நரேந்திர மோடி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற குறித்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது.
இதற்கமைய, அந்த அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணி சார்பில் அதிகபடியாக, கே.எல். ராகுல் 66 ஓட்டங்களையும், விராட் கோலி 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
விராட் கோலி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற 72ஆவது அரைச் சதம் இதுவாகும்.
அத்துடன், கே.எல். ராகுல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற 17ஆவது அரைச் சதம் இதுவாகும்.
பந்து வீச்சில், ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 241 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணி சார்பில் அதிகபடியாக, டிராவிஸ் ஹெட் 137 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 5ஆவது சதம் இதுவாகும்.
அத்துடன், மார்னஸ் லாபுசாக்னே 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 11ஆவது அரைச் சதம் இதுவாகும்.
பந்து வீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியுடன் ஆஸ்திரேலிய அணி 6ஆவது முறையாகவும் உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளது.