உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என சர்வதேச நிபுணர் உறுதி
உத்தரகண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு நிச்சயமாக வீட்டுக்குத் திரும்புவர் என்று சர்வதேச நிபுணர் ஆர்னால்டு தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கி பத்து நாட்களாக தவித்து வருகின்றனர். அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச நிபுணர் ஆர்னால்டு டிக்ஸ் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், “மீட்பு படையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை விரைவாக வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் தொழில்நுட்பரீதியாக சில சிரமங்களை சந்தித்து வருவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்படுகிறது. அதனால் மீட்பு படையினர் வேறு சில திட்டங்களையும் வைத்துள்ளனர்.
சுரங்கப்பாதைக்கு மேலிருந்து துளையிட்டு மீட்க முயற்சித்து வருகிறார்கள். மேலும் முன்பக்க வழியாக மற்றும் பக்கவாட்டு வழியாக என பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். இதில் எந்த வழியாக தொழிலாளர்கள் வெளியில் வரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் நிச்சயம் மீட்கப்பட்டு வீட்டுக்கு திரும்புவார்கள்.
அரசின் அனைத்து துறை பணியாளர்களும் இங்கு இருக்கின்றனர். அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் ஒத்துழைப்புடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, மீட்புக் குழுவினர் வாக்கி-டாக்கி மூலம் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளிகளுடன் பேசும் முதல் விடியோ புதன்கிழமை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலையில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்க பத்தாவது நாளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.