சன்ஸ் அண்ட் ஃபாதர்ஸ் : பெண் இயக்குனரின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற இலங்கை திரைப்படம்
புத்து சக பியவறு ( தனயரும் தந்தையரும்) ‘Puththu Saha Piyavaru’ (Sons and Fathers- Thanaiyarum Thanthaiyarum) , தமிழ் – சிங்களம் கலந்த உரையாடல்கள் கொண்ட வித்தியாசமான திரைப்படம்.
இலங்கையில் நடந்த கறுப்பு ஜூலை கலவரத்தை பின்புலமாகக் கொண்டு , தமிழ் இசைக்கலைஞரான ரெக்ஸ் பெரியசாமி குடும்பம் எனும் கதாபாத்திரம் எதிர்கொண்ட துயரைப் பற்றி சொல்லிய கதை.
ரெக்ஸ் பெரியசாமி முன்னணி இசையமைப்பாளர் ஆவார். தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில், காந்தி என்ற சிங்கள பெண்ணை மணக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கனவே மணம் செய்து , ஒவ்வொருக்கும் முதல் தாரத்தில் ஒவ்வொரு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் முன்னைய மண வாழ்வு குறித்து எந்த தெளிவையும் இயக்குனர் காட்சிப்படுத்தவில்லை.
காந்தியின் மகன் லக்கி மற்றும் பெரியசாமியின் மகள் மாலாவும் சேர்ந்த மகிழ்ச்சியான வாழ்க்கையுடன் அவர்கள் குடும்பம் வாழ்ந்து வருகிறது.
அரசியல் கொந்தளிப்பின் சூழலில் சிக்கியுள்ள இரண்டு தலைமுறை இசைக்கலைஞர்களின் கதைதான் இத்திரைப்படத்தின் கருத்தாக்கமாக உள்ளது. வடக்கில் தமிழ் பிரிவினைவாத யுத்தம் நடந்து கொண்டிருந்த போது , சிங்கள மக்களோடு சேர்ந்து வாழ்ந்த மக்களின் பிரிவை விவரிப்பதன் மூலம் இக்கதை நகர்கிறது.
சன்ஸ் அண்ட் ஃபாதர்ஸ் இலங்கையில் உள்ள திரைப்படத் துறையின் வரலாறையும் சிறிது விளக்கி கடந்து செல்கிறது. 1983 களில் தமிழர்களின் கைகளில் இருந்த சினிமா தயாரிப்பு ஸ்டூடியோக்கள் எரிந்து நாசமாகிய கொடூரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது இலங்கை திரையுலகின் பேரிழப்புதான். ஆனால் அதை வலுவாக காட்ட போதுமான காட்சிகள் அமையவில்லை.
2018 ல் ஹைதராபாத்தில் நடந்த உலக இந்திய திரைப்பட ஜூரியில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் சிறப்பு அதில் வரும் பாடல்களும் இசையும்தான்.
2019 ஆம் வருடம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இசைக்கான விருதையும் பெற்றுள்ளது.
2018 ல் சிங்கப்பூர் தெற்காசிய திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வாகியுள்ளது. தெரண திரைப்பட விழாவிலும் , நாளைய சினிமா 2018 என்ற பிரிவில் விருது பெற்றுள்ளது.
இந்த படம் கடந்த செப்டம்பரில் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, மேலும் டெல்லியின் ஆசிய மகளிர் பயண திரைப்பட விழாவில் IAWRT இன் 14 வது பதிப்பிற்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தை சமூக ஆர்வலர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகை என பல முகங்களைக் கொண்ட டாக்டர் சுமதி சிவமோகன் இயக்கியுள்ளார். கண்டி பேராதெனிய பல்கலைக்கழகத்தில், ஆங்கிலப் பேராசிரியராக இவர் பணிபுரிகிறார்.
வழக்கமாகவும் , பொதுவாகவும் வரும் மேற்கத்திய, சினிமா தயாரிப்பு சித்தாந்தங்களுக்கு முற்றிலும் மாறுபட்டு, உள்ளூர் நடிகர்கள் மற்றும் கலைஞர்களை வைத்தே இப்படத்தை முடித்துள்ளார்.
சினிமா என்ற கலைவடிவ உருவாக்கத்தில் சில குறைபாடுகள் உண்டு. முதன்மையாக திரைக்கதை வலுவானதாக இல்லை. அதனால் ஒரு கதையில் உருவாக்க வேண்டிய முதல் பாகம் கட்டமைத்தலில் பெரும் குறை உள்ளது. கதாப்பாத்திரங்கள் யார் என்று முதல் சில நிமிடங்களில் காண்பவர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும். அதாவது கதாபாத்திர அறிமுகம் புரியாமையால் , கதாப்பாத்திரங்களாக வருவோருக்கு, யார் யாரோடு என்ன தொடர்பு என்று புரிந்து கொள்ளவே கடினமாக உள்ளது.
அடுத்து படத்தில் இருக்க வேண்டிய தொடர்ச்சி(continuity) இல்லாதுள்ளது. முதன்மை கதாப்பாத்திரம் பெரியசாமி தமிழர் என்று புரிந்து கொள்ளத்தக்கவிதமாக எந்தவொரு வலுவான காட்சியும் இல்லை. மகன் வளர வளர , தன் வளர்ப்பு தகப்பனுடன் முரண்பட்ட உறவே வளருகிறது. மகள் வளர்ப்பு தாயை தன் தாயாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கை போன்ற போர் சூழலில் மீண்டு வந்த மக்களின் மனதில் மறுமணத்தை பற்றிய பயம் கலந்த சிந்தனையே உருவாக்கும். அப்படி ஒரு நிலை படத்தில் தெரிகிறது.
1983 கறுப்பு ஜூலையை புகைப்படங்கள் ஊடாக காட்டி கால வெளியை வெளிப்படுத்திய யுக்தி அருமை. அந்த போர் கலவர சூழல் 1993 ல் ரோஜா திரைப்பட வருகையிலும் அப்படியே இருந்தது என புனையப்பட்டுள்ளது.
மகனின் கதாபாத்திரம் , உயிர் நண்பி கொல்லப்படுவதால் உருக்குலைகிறது. அதேபோல் தந்தை நினைத்த அமைதியான சூழல், மகனது காலத்திலும் கூட மாறவில்லை என இக்கதையினுள் கோடிட்டு காட்டியுள்ளனர்.
கதை புரிய வேண்டும் எனில் குறைந்த பட்சம் இலங்கை வரலாறு தெரிந்து இருக்க வேண்டியதும் அவசியம் என்பது இத்திரைப்படத்தின் பெரும் குறைபாடாக உள்ளது.
நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே சில இடங்களில் அவர்கள் பேசுவது புரியவில்லை. சில காட்சிகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போன்ற உணர்வை தருகிறது. நல்ல கருத்தான கதையுடன் துவங்கிய இத்திரைப்படத்திற்கு , வலுவான திரைக்கதை அமைந்திருந்தால் உண்மையில் சிறப்பாக இருந்திருக்கும்.
கதை – திரைக்கதை – இயக்கம் சுமதி சிவமோகன் , படத்தொகுப்பாளர் எல்மோ ஹாலிடே, ஒளிப்பதிவு சுனில் பெரேரா, கலை இயக்குனர் லால் ஹரிந்திரநாத் போன்றோர் இத்திரைப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இசை அந்தோணி சுரேந்திர
சன்ஸ் அண்ட் ஃபாதர்ஸ் டிரேய்லர்