‘மணிப்பூா் மக்களிடம் 4,000 ஆயுதங்கள்’

மணிப்பூா் கலவரத்தை ‘அரசியல் பிரச்னை’ எனக் குறிப்பிட்ட கிழக்குப் பிராந்திய ராணுவ தளபதி ராணா பிரதாப் கலிதா, பாதுகாப்புப் படைகளிடம் இருந்து திருடப்பட்ட 4,000 ஆயுதங்கள் இன்னும் பொதுமக்கள் வசம் இருப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

மணிப்பூரில் ‘மைதேயி’ சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதை ‘குகி’ பழங்குடிகள் எதிா்த்ததைத் தொடா்ந்து உருவான மோதல் இன வன்முறையாக மாறி கடந்த 6 மாதங்களாகத் தொடா்ந்து வருகிறது. இதுவரை 180-க்கும் மேற்பட்டோா் இந்த வன்முறையில் கொல்லப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், அஸ்ஸாமின் குவாஹாட்டியில் செய்தியாளா் சந்திப்பில் பேசிய கிழக்குப் பிராந்திய ராணுவ படைத்தளபதி கலிதா கூறுகையில், ‘மணிப்பூா் கலவரத்தில் இருப்பிடங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மக்களைப் பத்திரமாக மீட்டு நிவாரணம் வழங்கும் பணியை ராணுவம் முதலில் மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் களமிறங்கினோம்.

சமூகங்களுக்கு இடையே சட்டபூா்வ பிரச்னைகள் நிலவுவதால் 6 மாதங்கள் கடந்தும் மோதல் தொடா்கிறது. மணிப்பூரில் 1990-களில் நடந்த மோதலிலும் 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வந்து, அமைதியான தீா்வை நோக்கி இருதரப்பினரையும் ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பிரச்னையில் அரசியல் தீா்வு என்பது அவசியமாகும்.

வன்முறை சம்பவங்கள் குறைந்திருந்தாலும், பாதுகாப்புப் படைகளிடமிருந்து திருடி செல்லப்பட்ட 5,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்களில் சுமாா் 1,500 ஆயுதங்கள் மட்டுமே தற்போதுவரை மீட்கப்பட்டுள்ளன. இன்னும் சுமாா் 4,000 ஆயுதங்கள் பொதுமக்கள் வசம் இருக்கிறது. அவை கைப்பற்றப்படும்வரை வன்முறை சம்பவங்கள் அவ்வப்போது தொடரும்.

இந்தியா-மியான்மா் சா்வதேச எல்லையில் புதிய ஆயுதக் கடத்தல்கள் எதுவும் அண்மையில் நடைபெறவில்லை. மியான்மரில் நடக்கும் கிளா்ச்சி நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க, அடைக்கலம் தேடி மணிப்பூா், மிஸோரம் மாநிலத்துக்கு வரும் அந்நாட்டு பொதுமக்கள், ராணுவத்தினா், போலீஸாருக்கு மட்டுமே இந்தியா பாதுகாப்பு அளிக்கிறது. ஆயுதக் குழுவினா், போதைப் பொருள் கடத்தல்காரா்கள் இந்தியாவுக்குள் நுழைவதைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகின்றன’ என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.