ரூ.9,000 கோடி முறைகேடு… அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிக்கிய பைஜூஸ்
பெங்களூருவில் கணிதப் பாடத்திற்கு டியூசன் எடுத்ததில் தொடங்கிய பைஜூஸின் பயணம், இன்று பல்வேறு நாடுகளிலும் கிளை பரப்பும் அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி கிடுகிடுவென இருந்ததோ, அதே வேகத்தில் அடுத்தடுத்த சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது பைஜூஸ் நிறுவனம். ஆன்லைன் வழியாக பள்ளி மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான Think & Learn Private Limited-ஐ, 2011-ஆம் ஆண்டு பைஜூ ரவீந்திரன், திவ்யா தம்பதி தொடங்கினர். இணைய சேவை மற்றும் ஸ்மார்ட் போன்களின் வளர்ச்சியால், இவர்களின் பைஜூஸ் மொபைல் ஆப் வழியாக கல்வி பெறுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது.
கொரோனா காலகட்டத்தில் லாபம் ஈட்டுவதில் புதிய உச்சத்தை தொட்ட பைஜூஸ் நிறுவனம், பின்னர் கடும் சரிவை எதிர்கொண்டது. இதனால், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்தது, அவர்களுக்கான செட்டில்மெண்ட் தொகையை முழுமையாக வழங்காதது, கடன் தொகையை செலுத்த முடியாத நிலை என பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் பைஜூஸ் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறையின் நோட்டீஸ் தற்போது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ரூ.9,362 கோடிக்கான பணப்பரிமாற்றத்தில், அந்நியச் செலாவணி மேலாண்மை சட்ட விதிகளை மீறியதாக, பைஜூஸ் நிறுவனர் பைஜூ ரவீந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் முதலீடு செய்தது தொடர்பாகவும், வெளிநாட்டில் இருந்து முதலீடு பெற்றது குறித்த ஆவணங்களையும் தாமதமாக தாக்கல் செய்ததாகவும் பைஜூஸ் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றதில் அந்நியச் செலாவணி விதிகளை மீறியதாக, கடந்த ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் பைஜூஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது, அமலாக்கத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், பைஜூஸ் நிறுவனம் தொடங்கியது முதல் மார்ச் மாதம் வரை ரூ.28,000 கோடி அளவுக்கு நேரடி அந்நிய முதலீட்டை பெற்றதாகவும், இதில், ரூ.9,754 கோடிக்கு முறையான கணக்குகள் இல்லை எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தான் ரூ.9,362 கோடி பணப்பறிமாற்றத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பைஜூ ரவீந்திரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனினும், இதை மறுத்துள்ள பைஜூஸ் நிறுவனம், அமலாக்கத்துறையிடம் இருந்து இதுவரை எந்த நோட்டீஸும் வரவில்லை என விளக்கம் அளித்துள்ளது.