ரணில் சந்தர்ப்பவாதி! பேரினத்தாரின் மேலாண்மைக்கு அடிபணியோம்!! – சுமந்திரன் சூளுரை.
கோட்டா ஆட்சிக்கு எதிரான குழப்ப சமயத்தில் அதை சுமுகமாகத் தீப்பதற்கு எல்லாத் தரப்புகளுடனும் எட்டப்பட்ட இணக்க உடன்பாட்டுக்கு தானும் சம்மதித்து வந்துவிட்டு, பிரதமர் பதவி என்றதும் இணக்க நிலைப்பாட்டைக் கைவிட்டுக் கழன்ற சந்தர்ப்பவாதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்ற சாரப்பட நேற்று (22) தமது நாடாளுமன்ற உரையில் காட்டமாக வைதார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
”அதிக எண்ணிக்கையின் காரணமாக, நீங்கள் எங்கள் உரிமைகளை மிதித்துவிடலாம் என்று நினைத்தால் அது சரிவராது. நாங்கள் தலை சாய்க்க மாட்டோம். பெரும்பான்மை ஆட்சியை ஏற்க மாட்டோம். இந்த நாட்டில் கடைசி நபர் வாழும் வரை நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” – என்றும் தமது நேற்றைய நாடாளுமன்ற உரையில் சுமந்திரன் சூளுரைத்தார்.
சுமந்திரன் தமது உரையில் கூறியவை வருமாறு:-
“நாங்கள் இதுவரை ஒரு சுவாரஸ்யமான விவாதத்தை நடத்தியுள்ளோம், ஜனாதிபதியும் அதில் பங்கேற்றார்.
இங்கு பரிசீலனையில் உள்ள நிறுவனங்களில் ஒன்று அரசமைப்புச் சபை. அது குறித்துவ முன்னும் பின்னுமாக இன்று பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், நான் இன்னும் அடிப்படையான பிரச்சினை ஒன்றை எழுப்ப விரும்புகின்றேன்.
அரசமைப்புச் சபை சர்ச்சை
அரசமைப்புச் சபையில் ஒரு வெற்றிடம் உள்ளது. பத்து உறுப்பினர்களும் நியமிக்கப்படவில்லை. இது மிகவும் தீவிரமான பிரச்சினை. இது எங்களுக்கு மிகவும் தீவிரமான பிரச்சினை. ஓர் உறுப்பினரை நியமிப்பதற்கான உரிமை எமக்கு இருந்ததாலும், அதற்கான ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாலும், சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனை அரசமைப்புச் சபைக்கு நான் பிரேரித்தும் இன்றுவரை அவர் அரசமைப்புச் சபைக்கு நியமிக்கப்படவில்லை.
இதை நாங்கள் பலமுறை எழுப்பியுள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்திலும், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் எழுப்பியுள்ளார். அது எங்களின் உரிமை என்று சபாநாயகர் தெளிவாக கூறியுள்ளார்.
உண்மையில் தமக்கு (அந்த இடத்துக்கு நியமிக்கும்) உரிமை இருப்பதாகக் கூறும் ஏனையவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் என்று எழுத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்காத பட்சத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க முடியாது. எனவே, அந்த இடத்துக்கு அவர்கள் உரிமை கோர முடியாது. இந்த உறுப்பினரை அரசமைப்புச் சபைக்கு நியமிக்கும் உரிமை அவர்களுக்கு இல்லை.
இது வெறும் தொழில்நுட்பச் சிக்கல் இல்லை. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியும், எதிர்க்கட்சியில் இரண்டாவது பெரிய கட்சியுமான நமக்கு அரசமைப்புப் பேரவையின் பங்கேற்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
தீர்வு பற்றிக் கூறும் ஜனாதிபதியால்
ஒன்றையும் தீர்க்க முடியவில்லை
தான் முதலில் பிரதமராகவும், பின்னர் ஜனாதிபதியாகவும் பதவியேற்ற காலத்திலிருந்து தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தாம் தீர்வு காண்பார் என ஜனாதிபதி கூறுகின்றார்.
அதற்காக – அந்த நோக்கத்திற்காக – அவர் மூன்று அனைத்துக் கட்சி மாநாடுகளை நடத்தினார். ஒன்று கடந்த ஆண்டு. மற்றும் இரண்டு இந்த ஆண்டு.
ஆனால், இந்தச் சபையில் இந்த ஒரு பிரச்சினையைக் கூட அவரால் தீர்க்க முடியவில்லை. இந்த அவையாலும் கூட தீர்க்க முடியவில்லை. இது ஒரு பொருட்டல்ல. அரசமைப்புச் சபையில் இருந்து எங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான முறையில் தீர்வு காண்பதாகப் பேசுகிறீர்கள். அதை எப்படிச் சாத்தியம்? உங்களால் அந்தக் காலியிடத்தைக் கூட நிரப்ப முடியவில்லை.
இப்போது சில நாள்களுக்கு முன்பு இவ்விடயம் ஒரு தீவிர கவனத்திற்கு வந்துள்ளது. அரசமைப்புச் சபையில் ஒரு முட்டுக்கட்டை நிலைமை உள்ளது, இது அனைவருக்கும் தெரியும். ஓர் இருக்கை இன்னும் காலியாக இருக்கும்போது முட்டுக்கட்டை நிலை. அதை நிரப்பியிருந்தால் முட்டுக்கட்டை நிலைமை இருந்திருக்காது.
இந்த நாட்டில் அனைவரும் சமம் என்றும், அனைவருக்கும் சமமான பிரதிநிதித்துவம் உண்டு என்றும் வியாக்கியானம் கூறும் நீங்கள் மிக முக்கியமான அமைப்பான அரசமைப்புச் சபை போன்ற ஓர் அமைப்பில் எங்களின் இடத்தைப் பறித்துள்ளீர்கள் என்பதை இந்த முழு நாடும் அறிந்திருக்க வேண்டும். அப்படியான நீங்கள் எப்படி யாரையாவது எதிர்கொண்டு, முகம் கொடுத்து இது சரியான ஆட்சி என்று கூற முடியும்?
எனவே, இன்று நான் இதை ஒரு தீவிரமான பிரச்சினையாக எழுப்புகின்றேன். இது வெறுமனே அரசமைப்புச் சபையின்,வெற்றிடத்தை நிரப்புவது மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான தேசிய பிரச்சினையும் கூட.
இந்த நாட்டின் தேசிய வாழ்க்கையிலிருந்து நாங்கள் வெளியேற்றப்பட்டுவிட்டோம். அரசமைப்புச் சபைக்கு வெளியே நாம் வைக்கப்பட்டுள்ளமை அதன் மற்றொரு பிரதிபலிப்பாகும்.
எங்களை எங்களின் வழியில்
செல்வதற்கு விட்டு விடுங்கள்
1972இல் முதல் குடியரசு அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது, அதை தன்னெழுச்சியான அரசமைப்பு என்று அழைத்தீர்கள். ஆனால், நாங்கள் வெளியில் விடப்பட்டோம். நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு அடிப்படைத் தீர்மானமும் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
சந்தர்ப்ப வசமாக, தற்செயலாக, தர்மலிங்கம் சித்தார்த்தனின் தந்தையார் வி.தர்மலிங்கம், அப்போது அவர் சமஷ்டிக் கட்சியின் – இலங்கை தமிழரசு கட்சியின் – நாடாளுமன்ற உறுப்பினர், அந்த அரசமைப்பின் அடிப்படைப் பிரேரணைகளுக்குத் திருத்தங்களை முன்வைத்தார். அந்த தீர்மானங்கள் ஒவ்வொன்றும் 84 க்கு 16, 82 க்கு 13 என பெரும்பான்மையாகத் தோற்கடிக்கப்பட்டது. அப்படித்தான் நாங்கள் வெளியேறினோம்.
அப்படித்தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் கைகோர்த்து 1976 இல் தமிழர் ஐக்கிய முன்னணியை ஆரம்பிக்க வேண்டியது எமது கட்சிக்கு அவசியமானது. அதுதான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழிவகுத்தது.
எங்களுக்கு இடமளிக்க முடியாவிட்டால், எங்களுக்கு உரிய இடத்தை வழங்க முடியாவிட்டால், எங்களை எங்கள் வழியில் விட்டு விடுங்கள், நீங்கள் ஏன் எங்களைப் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள் என்பதைத்தான் நாங்கள் சொன்னோம்.
எங்களுக்கு எங்கள் சொந்த வழி உண்டு. அதைத்தான் நாங்கள் சொன்னோம். அதுதான் மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு வழிவகுத்தது.
நாம் அடி பணியோம்
ஆனால், நீங்கள் இன்னும் அதைச் செய்கிறீர்கள். இன்றும் நீங்கள் அதைத்தான் செய்கிறீர்கள். ஒரு வருடத்திற்கும் மேலாக, எங்களை அரசமைப்புச் சபையில் இருந்து வெளியேற்றினீர்கள். இனிமேலும் இதனை இந்தச் சபையில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நாங்கள் பிச்சைக்காரர்கள் அல்லர். இதையும் அதையும் கொடுங்கள் என்று கெஞ்சுவதற்கு. நாங்கள் இந்த நாட்டில் பிச்சைக்காரர்கள் அல்லர். நாம் ஒரு மக்கள் குழுமம். நாங்கள் பாரம்பரியம் கொண்ட மக்கள். இந்த நாட்டில் மற்றவர்கள் யாவருக்கும் முந்தியிருந்து வாழ்கின்றோம்.
உங்களின் அதிக எண்ணிக்கையின் காரணமாக, நீங்கள் எங்கள் உரிமைகளை மிதித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள், நீங்கள் முற்றிலும் தவறாக நினைக்கிறீர்கள். இதுபோன்ற முயற்சிகளுக்கு நாங்கள் தலை சாய்க்க மாட்டோம். பெரும்பான்மை ஆட்சியை ஏற்க மாட்டோம். இந்த நாட்டில் கடைசி நபர் வாழும் வரை நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இது முக்கிய வாரம்
இது ஒரு முக்கியமான வாரம். எங்களுக்காகப் போராடியவர்களுக்காக நாம் அவர்களை கௌரவிக்கும் வாரம் இது. அந்தவகையில் அதை வெளிப்படுத்துவதற்கு நான் தயங்க மாட்டேன்.
ஏன் அவர்கள் எங்களுக்காகப் போராடினார்கள்? ஏனென்றால் தேசிய நீரோட்டத்தில் இருந்து – வாழ்க்கையில் இருந்து – (உங்களால்) நாம் தூக்கி வீசப்பட்டோம். எங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.
நாம் அந்தச் சிந்தனையில் இப்போது இல்லை. ஐக்கியப்பட்ட, பிளவுபடாத, பிரிக்கப்படாத, ஒன்றுபட்ட நாட்டுக்குள் சேர்ந்து வாழ்வதற்கு நாங்கள் இன்னும் தயாராகவே இருக்கின்றோம் என்பதை நாம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தி இருக்கின்றோம். அதற்கு உங்கள் பிரதிபலிப்பு எப்படி இருந்தது? எப்படி இருக்கின்றது? முடிவு உங்களின் கைகளில். நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். எங்களை எப்போதும் இப்படி தனித்து நீங்கள் ஒதுக்கி விட முடியாது.
எங்களுக்காகப் போராடியவர்களின் மறைவை அவர்களின் உறவுகள் வடக்கு, கிழக்கில் நினைவுகூரும் இச்சமயத்தில், எங்களை நீங்கள் ஒதுக்கித் தள்ளி விட முடியாது என்பதை மீண்டும் குறிப்பிடுகின்றேன்.
அதிக எண்ணிக்கை உங்கள் பக்கம் இருப்பதால் மட்டும் உங்கள் கருத்து சரி என்று ஆகிவிடாது. அத்தகைய அதிக எண்ணிக்கை பல சமயங்களில் உங்களைத் தவறானவர்களாக – பிழையானவர்களாகச் செயற்பட வைத்து விடும்.
நீங்கள் உங்கள் எண்ணிக்கையை வைத்து எங்களை முற்றாக அழித்து விடலாம் என்று நினைக்கின்றீர்கள். அதைத்தான் இந்தச் சபையிலும் கூட நீங்கள் செய்கின்றீர்கள்.
ஜனாதிபதியின் நடத்தை
மிகவும் வெட்கக்கேடானது
நான் வேறு ஒரு விடயத்தையும் இங்கு சரியாகக் கூற வேண்டும். அரசாங்கத்தை அமைக்க எதிர்க்கட்சித் தலைவரை அழைத்தனர், ஆனால் அவர் அதைச் செய்யவில்லை, அது மக்களின் நம்பிக்கையை மீறுவதாகும், அது தவறு என்று ஜனாதிபதி இங்கு கூறினார்.
ஆனால் ஜனாதிபதி கூறியவைதான் தவறு. ஜனாதிபதி இன்று பல முனைகளில் தவறு செய்தார்.
அரசமைப்புச் சபையை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாக அவர் இங்கு வர்ணித்தபோது, அவர் தவறு செய்தார். சபாநாயகர் தலைமை தாங்கும் நிர்வாகத்தின் ஒரு பகுதி உங்களிடம் இல்லை, அது சட்டமன்றக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
அந்த நியமன நேரத்தில் முழு எதிர்க்கட்சியும் ஏதோ ஒன்றை ஒப்புக்கொண்டது. அத்துடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் உருவாக்கப்பட்ட தேசியத் திட்டமான ஆவணம் ஒன்றும் இருந்தது. அதன்படி, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்பட்டது. அதனால் அவர் கௌரவமாக வெளியே செல்ல, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும், அதற்கு அவர் சம்மதித்தால் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமராக பதவியேற்பார். அதுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தம். ஒரு கட்சியாக நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம். ஜே.வி.பி. அதற்கு ஒப்புக்கொண்டது. ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு ஒப்புக்கொண்டது. தனியொரு உறுப்பினராக அவரும் (ரணிலும்) அதற்கு ஒப்புக்கொண்டார்.
(ஆனால் இணங்கிய அந்த ஏற்பாட்டைக் குழப்பி) அவர் பிரதமராகப் பதவியேற்றதும், இது வெட்கக்கேடான செயல் என்று இந்தச் சபையில் முதல் ஆளாக நானே சொன்னேன். அவர் அதைக் குறித்து மிகவும் வருத்தப்பட்டார். ஆனால், உண்மையில் இது அவரது வெட்கக்கேடான நடத்தை. அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எடுத்த ஒப்பந்தத்தை அவர் மீறினார். மேலும் அந்த ஒப்பந்தத்தை மீறி, அக்குழப்ப நிலையைப் பயன்படுத்திய ஒரு நபராக ஓடி வந்து அந்த அலுவலகத்தை எடுத்துக் கொண்டார்.
எனவே நான் எதிர்க்கட்சித் தலைவரைப் பாதுகாக்க இங்கு பேசவில்லை. ஆனால், ஒரு முழு வருடத்திற்குப் பிறகும் நான் சரியான பதிவை வைக்க வேண்டிய நேரம் இது என்று நினைக்கின்றேன். கதவில் ஓட்டையைக் கண்டதும் அந்த ஒப்பந்த இணக்கத்தை ஜனாதிபதியால் மீறினார். அவர் சந்தர்ப்பவாதி. அவர் அங்கு மெல்ல முதலில் கால் பதித்து, அங்கு நுழைந்து, இந்த நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியானார்.
1996 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டையில் அவரது தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. இப்போது அதைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை. இப்போது அதைப் பற்றி பேசவில்லை.
ராஜபக்ஷ வெளியேற வேண்டும்
பொதுமக்களின் நம்பிக்கையை மீறுவது மிகவும் தீவிரமான விஷயம். இன்று அவர் அளித்த பதில் ஒன்றும் இல்லை. நீங்கள் மக்களின் நம்பிக்கையை மீறியிருந்தால், அது நாட்டின் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்தால், அந்த நபர்களுக்கு இந்த சபையில் உட்கார தார்மீக உரிமை இல்லை.
முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் உள்ள வேறு இடங்களில், ஜனநாயகத்தை மதிக்கும் இடத்தில், சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் இடத்தில், மக்கள் நம்பிக்கையை மீறியதாகக் கண்டறியப்பட்டவர்கள் மறுநாள் இராஜிநாமாச் செய்திருப்பார்கள். ஆனால், ராஜபக்சக்கள் அப்படியானவர்கள் அல்லர். பொது நம்பிக்கையை மீறியதாக இருந்தாலும் சரி, எதையெல்லாம் மீறியிருந்தாலும் சரி, அவர்கள் இரண்டுக்குமான கூச்சல்களைப் பொருட்படுத்துவதில்லை.
தங்களின் குடும்பம் மற்றும் தாங்கள் இந்த நாட்டிலிருந்து கொள்ளையடித்தவை பற்றி மட்டுமே அவர்கள் கவலைப்படுகின்றார்கள். அவர்கள் அப்படியே இருக்க முடியும். ஆனால் அவர்கள் இந்த நேரத்தில் கூட சட்டத்தின் ஆட்சியை மதிக்கவில்லை என்றால், இந்த நாட்டின் குடிமக்களின் கடுமையான கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொறுப்பை ஏற்றுக்கொண்டு இந்தச் சபையை விட்டு வெளியேற வேண்டும். இந்த அவையில் மக்கள் பிரதிநிதிகளாக தொடர அவர்களுக்கு உரிமை இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒருவரே அங்கு இருக்கின்றார், ஆனால் அவர் பதவி விலக வேண்டும், அவருக்கு கண்ணியம் இருந்தால், அவர் சட்டத்தை மதிக்கின்றார் என்றால், அவர் பதவி விலக வேண்டும்.
ரணிலின் மாற்றம்
அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே!
2015 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில், நீங்கள் அத்தியாயங்கள் கணக்கில் பேசினீர்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செலவீனங்கள் அவரது முன்னோடிகளுடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட பாதியாக அப்போது குறைக்கப்பட்டது என்பது எனக்கு நினைவிருக்கின்றது. ஆனால் இன்று நாம் பார்ப்பது அதுவல்ல. ஜனாதிபதியின் செலவு கடந்த வருட வரவு – செலவுத் திட்டத்தில் இருந்ததை விட மிக அதிகம். எனவே, செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் சம்பந்தமாக கூட அவரது பார்வையில் ஒரு பெரிய மாற்றத்தை நாம் காண்கிறோம்.” – என்றார்.