தடுப்பு கைதி அலெக்ஸ் தாக்குதலால் இறந்தாரா? 3 பொலிஸாரைக் கைது செய்ய உத்தரவு : ஏனையோருக்கு அடையாள அணிவகுப்பு.

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த கைதி நாகராசா அலெக்ஸின் (வயது 26) மரணம் இயற்கையானது அல்ல, அது மனித உயிர்ப் போக்கு (Homicide) என அறிவித்த யாழ்ப்பாணம் நீதிவான், உயிரிழந்த நபருடன் கைதான மற்றையவர் அளித்துள்ள சாட்சியத்தில் பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறிய மூன்று பொலிஸாரையும் கைது செய்யுமாறும், ஏனையோரைக் கைது செய்யும் வகையில் சாட்சியினால் கூறப்பட்ட அடையாளங்களை ஒத்தவர்களை இனம் காண்பதற்குரிய அடையாள அணிவகுப்பை நடத்த ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
நவம்பர் மாதம் 8ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களில் ஒருவரான நாகராசா அலெக்ஸின் மரணம் இயற்கையானதா அன்றி மனித உயிர்ப்போக்கா எனக் கண்டறியும் விசாரணை இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போதே நீதிவான் தனது கட்டளையில் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த விசாரணையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இருவர், உயிரிழந்த அலெக்ஸுடன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றைய சந்தேகநபர் மற்றும் ஓய்வுபெற்ற ஆயுர்வேத வைத்தியர் ஆகியோருடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.
இவற்றின் அடிப்படையில் இடைக்கால கட்டளையிட்ட நீதிவான் இயற்கையானது அல்லாமல் ஏற்படுத்தப்பட்ட மனித உயிர்ப் போக்குக்குக் காரணமானவர்கள் என அவருடன் இருந்த மற்றைய சந்தேகநபரால் பெயர் குறிப்பிட்டு அடையாளம் கூறப்பட்ட மூன்று பொலிஸாரையும் கைது செய்யுமாறும், ஏனையோரைக் கைது செய்யும் வகையில் சாட்சியினால் கூறப்பட்ட அடையாளங்களை ஒத்தவர்களை இனம் காண்பதற்கான அடையாள அணிவகுப்பை நடத்த ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கான கட்டளையை நீதிமன்றப் பதிவாளரை அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
உயிரிழந்தவருடன் உடன் இருந்த மற்றைய சந்தேகநபரும் மூன்றாவது சாட்சியுமானவரைப் பொலிஸார் சில விடயங்களை இனம் காண அழைத்துச் செல்லக் கோருவதனால் இரு சட்டத்தரணிகள் சகிதம் அழைத்துச் செல்லவும் கட்டளையிடப்பட்டது.
இதேநேரம் அந்த மரண விசாரணை வழக்கில் உயிரிழந்நவர் சார்பில் 12 பெண் சட்டத்தரணிகள் உட்பட 36 சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இன்றைய இந்த வழக்கு விசாரணையின்போது யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.