முன்னணியை முறையாக அழைக்கவில்லை அதனால் கூட்டத்தில் பங்குபெறவில்லை
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு இன்று தான் முறையான விதத்தில் அழைப்பு கிடைத்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முறையாக அழைக்காததாலேயே கலந்து கொள்ளவில்லை என அக் கட்சியின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரனியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
வடக்குமாகான அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற அனைத்துக் கட்சி சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இன்று காலையில் எமது கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை தடைசெய்யப்பட்டமை தொடர்பில் பொது நிலைப்பாடு தொடர்பான கூட்டதில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
உண்மையில் இன்றே எமக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு முதல் அழைப்பு கிடைக்கவில்லை அதனாலேயே நேற்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இன்று அழைப்பு விடுக்கப்பட்டதன் அதனடிப்படையில் எமது கட்சி சார்பாக சட்ட ஆலோசகர்களான நானும் காண்டீபனும் கலந்து கொண்டிருந்தோம்.
தியாகி தீபம் திலீபன் ஒட்டுமொத்த தமிழர்களின் அபிலாசைகளை நிலைநிறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டவர். அவரை தமிழ் மக்கள் நினைவுகூறுவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி கொடுக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தோம், என்றார்.