கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கை விசாரணைக்கு ஏற்க முடிவு.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி அறிவிக்கும்படி கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரணைக்கு ஏற்பது என மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் பந்துல கருணாரத்தின, நீதியரசர் சமத் மொறாயஸ் ஆகியோரைக் கொண்ட ஆயம் இந்த முடிவை இன்று (24) அறிவித்தது.
அமைச்சரவைத் தீர்மானம் மற்றும் ஜனாதிபதியின் அனுமதி ஆகியவற்றுடன் 1989 முதல் கடந்த 34 வருடங்களாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது. அதன் தனித்துவத்தைப் பறிக்கும் விதத்தில் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளை சட்டவிரோதமானவை என அறிவிக்கவும், அது தனியான பிரதேச செயலக அந்தஸ்து மற்றும் கட்டமைப்புடையது என்று உறுதிப்படுத்தவும் உரிய உத்தரவை வழங்குமாறு கோரி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனால் இந்த மனு கடந்த ஜனவரியில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா என்ற விடயம் குறித்து கடந்த ஏப்ரல் மாதத்தில் நீதிமன்றம் விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்க இருக்கையில், கடைசி நேரத்தில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸும் இன்னும் ஒருவரும் இந்த வழக்கில் தங்களையும் இடையீட்டு மனுதாரர்களாகச் சேர்க்கும்படி கோரி விண்ணப்பித்தனர். அதன் அடிப்படையில் திரும்பவும் விசாரணைகள் நடைபெற்றன. மனுவை விசாரணைக்கு ஏற்பது என இன்று முடிவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அதன் அடிப்படையில் எதிர் மனுதாரர்களான பிரதமரும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, கல்முனை பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட அரச அதிபர் உள்ளிட்ட எதிர் மனுதாரர்களுக்கு அழைப்பாணை வழங்க உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் ஜனவரி 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும், இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசல் முஸ்தபா, சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன ஆகியோரும், அரசு தரப்பில் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மனோகர ஜயசிங்கவும் முன்னிலையாகினர்.