உத்தரகண்ட் சுரங்க விபத்து: 41 பேரை மீட்பதில் சிக்கல் நீடிப்பு
உத்தரகண்டில் நிலச்சரிவால் 12 நாள்களாக சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணியில் வெள்ளிக்கிழமை மீண்டும் தடை ஏற்பட்டது.
தொழிலாளா்கள் இருக்கும் பகுதிக்கு குழாயைச் செலுத்த, துளையிடும் பணிகள் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) தெரிவித்தது.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப் பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து இடிந்தது.
இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா்.
தொழிலாளா்கள் மயங்கிவிடாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவிலான உணவுகளையும் கைப்பேசி, அதற்கான மின்னேற்றிகளையும் அனுப்ப இடிபாடுகள் வழியாக 6 அங்குலம் அகலமுள்ள குழாய் செலுத்தப்பட்டது. இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோபி கேமரா மூலம் அனைத்து தொழிலாளா்களும் நலமாக இருப்பது விடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது.
இதனிடையே, 60 மீட்டா் தொலைவுக்கு 80 செ.மீ. விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளா்களை மீட்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தன.
குழாயைச் செலுத்துவதற்கு துளையிடப்பட்ட பாதையில் இரும்புக் கம்பிகள் குறுக்கிட்டதால் மீட்புப் பணிகள் கடந்த புதன்கிழமை இரவு நிறுத்தப்பட்டது. அந்தக் கம்பிகள் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, துளையிடும் பணிகள் வியாழக்கிழமை மதியம் மீண்டும் தொடங்கப்பட்டது.
பணிகள் தொடங்கிய சில மணிநேரங்களில் துளையிடும் ‘ஆகா்’ இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடா்வதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து, மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், என்டிஎம்ஏ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தொழிலாளா்கள் நிச்சயமாக மீட்கப்படுவா். மீட்புப் பணிகளுக்காக அனைத்து வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன. வியாழக்கிழமை இரவு நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகளில் தற்போதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால், பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும். மீட்புப் பணிகளின் நிலவரம் குறித்து ஊகங்களை செய்தி ஊடகங்கள் தவிா்க்க வேண்டும். இது மிகவும் சவாலான மற்றும் கடுமையான பணி ஆகும்’ என்றாா்.
மீட்புப் பணி ஒத்திகை: குழாய் முழுவதுமாக செலுத்தப்பட்ட பின்னா், 12 நாள்களாக சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களும் ஒருவா் பின் ஒருவராக குறைந்த உயரம் கொண்ட சக்கர இழுவை வாகனத்தின் மூலம் கயிற்றைக் கொண்டு இழுக்கப்படுவாா்கள். தேசிய மீட்புப் பணியினா் மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பணிக்கு வெள்ளிக்கிழமையன்று வீரா்கள் ஒத்திகை நடத்தினா்.