கிழக்கு மாவீரர்களின் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டது
கிழக்கு மாகாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாவீரர் நினைவுச் சின்னம் , நீதிமன்ற உத்தரவின் பேரில் பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
பல வருடங்களாக பராமரிக்கப்பட்டு வந்த மட்டக்களப்பு, வாழச்சேனை, தரவை மாவீரர் புதைகுழியின் மேல் , கடந்த நவம்பர் 18ஆம் திகதி கட்டப்பட்ட நினைவுத் தூபி, நவம்பர் 23ஆம் திகதி இடிக்கப்பட்டுள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாரால் வாழைச்சேனை நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, நவம்பர் 22ஆம் திகதி நினைவுத்தூபியை அகற்றுமாறு நீதவான் உத்தரவிட்டதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் புதைக்கப்பட்ட தரவை மாவீரர் புதைகுழி, யுத்தம் நிறைவடைந்த பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை, நவம்பர் 23ஆம் திகதி, மட்டக்களப்பு சந்திவெளி சந்தியில் தமிழர்கள் நினைவேந்தல் நடத்த முடியாத நிலையில், பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து தடை செய்யப்பட்ட அமைப்பினரின் நினைவேந்தலை அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தனர்.
ஆனால், படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் தாய்மார்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த உணவுப் பொருட்களை ஏற்பாட்டாளர்கள் விநியோகித்ததாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.