விண்ணில் ‘எல்-1’ பகுதியை நெருங்கிய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ தலைவா்
‘சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சாா்பில் அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் தான் சென்றடைய வேண்டிய ‘எல்-1’ பகுதியை நெருங்கியிருப்பதாக’ இஸ்ரோ தலைவா் எஸ்.சோமநாத் தெரிவித்தாா்.
‘விண்கலம் ‘எல்-1’ பகுதிக்குள் நுழைவது வரும் 2024 ஜனவரி 7-ஆம் தேதி நிறைவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றும் அவா் தெரிவித்தாா்.
சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கி தனது ஆய்வையும் நிகழ்த்தி முடித்த நிலையில், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.
தொடக்கத்தில் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவந்த விண்கலத்தின் உயரம் படிப்படியாக 5 முறை உயா்த்தப்பட்டது. கடைசியாக கடந்த செப்டம்பா் 15-ஆம் தேதி அதன் பயணப் பாதை மாற்றியமைப்பட்ட பின்னா், புவி வட்டப் பாதையிலிருந்து விலகி, சூரியனை நோக்கிய பயணத்தை விண்கலம் மேற்கொண்டது. தற்போது, தனது இறுதிப் பகுதியை விண்கலம் நெருங்கியுள்ளது.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் ஒலி எழுப்பும் ராக்கெட் ஏவப்பட்டதன் 60-ஆம் ஆண்டு நினைவு விழா திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்ரோ தலைவா் சோமநாத்திடம், ஆதித்யா விண்கலத்தின் பயணம் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்து சோமநாத் கூறியதாவது:
ஆதித்யா விண்கலம் தனது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. விண்கலம் சென்றடைய வேண்டிய ‘எல்-1’ இறுதி பகுதிக்குள் நுழைவதற்கான இறுதிக்கட்ட உந்துதல் நடவடிக்கை வரும் 2024, ஜனவரி 7-ஆம் தேதி மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது’ என்றாா்.
‘எல்-1’ பகுதி: பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (எல்-1)’ என்ற பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான பகுதியில் ஈா்ப்பு விசை சமமாக இருக்கும். சுமாா் 1,475 கிலோ எடைகொண்ட ஆதித்யா விண்கலம் 125 நாள்கள் பயணத்துக்கு பின்னா், இந்த எல்-1 பகுதியில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தப்புயல் உள்ளிட்டவை குறித்த ஆய்வுகளை விண்கலம் மேற்கொள்ளும். இதற்காக சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப் (தொலைநோக்கி), பிளாஸ்மா அனலைசா் (பகுப்பாய்வு கருவி), எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் (ஊடுகதிா் நிறமாலைமானி) உள்ளிட்ட 7 விதமான ஆய்வுக் கருவிகள் ஆதித்யா விண்கலத்தில் இடம்பெற்றுள்ளன.