உத்தரகண்ட் சுரங்கப்பாதை மீட்பு: முக்கிய சாதனங்களுடன் விமானப்படை வீரர்கள் விரைவு
உத்தரகண்ட் சுரங்கப்பாதையினுள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களை மீட்பதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முக்கிய சாதனங்களுடன் இந்திய விமானப்படை வீரர்கள் உத்தரகாசிக்கு விரைந்தனர்.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதை கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட திடீா் நிலச்சரிவைத் தொடா்ந்து இடிந்து விழுந்தது.
இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள், கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டனா். அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு 15-வது நாளாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மீட்பு பணிகளுக்கு தேவையான முக்கிய டிஆர்டிஓ சாதனங்களுடன் இந்திய விமானப் படையினர் உத்தரகண்டின் டேராடூனுக்கு விரைந்துள்ளனர். இத்தகவலை இந்திய விமானப்படை அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
முன்னதாக, சுரங்கப்பாதையின் உள்ளே சிக்கிய ஆகர் துளையிடும் இயந்திரத்தின் பிளேடுகள், ஹைதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பிளாஸ்மா வெட்டும் இயந்திரத்தின் மூலம் வெட்டப்பட்டன.
மீட்பு பணிகளுக்கான புதிய இயந்திரங்கள் வருவதற்கு முன்பாக இடிபாடுகளில் இருந்து ஆகர் இயந்திரத்தின் பிளேடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் சுரங்கப்பாதையினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக, அவர்களின் குடும்பத்தினருடன் அவர்கள் பேசும் வகையில் தரைவழி தொலைபேசி இணைப்பு வழங்கும் பணிகளில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.