தெலங்கானாவை கடனில் முழ்கடித்த சந்திரசேகர ராவ் ஆட்சி – பிரதமர் மோடி கடும் விமர்சனம்
வரும் 30 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கும் தெலங்கானா மாநிலத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அந்த மாநிலத்தில் ஆளும் பி.ஆர்.எஸ் , பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் தெலங்கானாவில் பிரதமர் மோடி நேற்று பரப்புரையில் ஈடுபட்டார்.
நிர்மல் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சந்திரசேகர ராவ் ஆட்சியில் தெலங்கானா கடனில் மூழ்கியுள்ளதாகவும், அவர் மாநில வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை எனவும் சாடினார். பண்ணை வீட்டில் இருந்து கொண்டு, ஏழைகளுக்கு வீடு வழங்காத முதலமைச்சர் தேவையா என கேள்வி எழுப்பினார்.
இந்த கூட்டத்தில் சிறுமி ஒருவர் பாரத மாதா வேடத்தில் வந்து தனது பெற்றோருடன் நின்றிருந்தார். இதனை கவனித்த பிரதமர் மோடி சிறுமியை பார்த்து கையசைத்தார். சந்திரசேகர ராவ் ஏழைகளின் எதிரி எனவும் பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.
இதனிடையே தெலங்கானாவில் ராகுல்காந்தியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காமரெட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் ஊழல் நிறைந்து காணப்படுவதுடன், பணம் கொழிக்கும் அனைத்து துறைகளும் ஒரே குடும்பத்தின் கையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அந்தோல் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட ராகுல், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் முதலில் பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் மாதந்தோறும் செலுத்தப்படும் என்று உறுதியளித்தார் முன்னதாக பேசிய ராகுல்காந்தி மத்தியில் பாஜகவை வீழ்த்துவதே முதல் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.