சீனாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்… மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
சீனாவில் குழந்தைகளிடையே பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலியாக , மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், மருந்துகள், காய்ச்சலுக்கான தடுப்பூசிகள், ஆக்சிஜன், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் நோய் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் காணொலி காட்சி வாயிலாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
பின்னர் பொதுசுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்றின் போது கடைபிடிக்கப்பட்ட கண்காணிப்புக்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை செயல்படுத்த வேண்டும். குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே, இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், கடுமையான சுவாச நோய் போன்றவைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களின் தரவுகளை, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்படும் நோயாளிகள், குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் பரிசோதனை மாதிரிகளை, மாநிலங்களில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.