ரணில், மங்கள, சம்பிக்க, சுமந்திரன், அநுர ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குவில் இன்று ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
குறித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதற்கு அமைய , முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக, மலிக் சமரவிக்கிரம மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன், தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணியளவில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினர்.
அதன்பின்னர் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் வாக்குமூலம் வழங்கிவிட்டு அங்கிருந்து வெளியேறினர்.
திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பளார் நாயகம் கித்சிறி ரணவக்கவினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அதன் பிரதிவாதிகளாக இவர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.
இதேவேளை, சி.ஐ.டியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் சார்ஜென்ட் மெண்டிஸ் ஆகியோரும் இன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், சிறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஆஜராகியிருந்தனர்.
ரஷ்யாவின் முன்னாள் இலங்கை தூதுவரான உதயங்க வீரதுங்கவும் இன்று அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ஆஜரானார். சட்ட திட்டங்களுக்கு அமைய, இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்று தொடர்பில், அதனை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம், அவர் அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானதாக அவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அவரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் அங்கு முன்னிலையானார்.