நினைவேந்தல் உரிமையைத் தட்டிப் பறிக்க முடியாது மீண்டுமொரு யுத்தத்தை எவரும் விரும்பவில்லை.

“இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் தென்னிலங்கை அரசியலில் சர்ச்சையாக மாறியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மீண்டுமொரு ஆயுதப் போரை தமிழர்களோ, சிங்களவர்களோ அல்லது முஸ்லிம்களோ விரும்பவில்லை. எனினும், கடந்த காலத்தில் இடம்பெற்ற ஆயுதப் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் அமைதியாக நினைவேந்த அனுமதி வழங்கப்பட வேண்டும். இதை எவரும் இனவாத ரீதியில் அல்லது அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது.” – என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

“தேசிய ரீதியில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதைத்தான் விரும்புகின்றார்கள். எனவே, தீர்வை நாம் விரைவில் வழங்க வேண்டும். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றும்போதும் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.” – என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.