ரங்கமணி கணவர் விச்வேச்சுரன். தன் நோயை மறைத்து திருமணம் செய்து கொண்டவர், ஒரு குழந்தை தர கையாலாகாத நிலையில் காசநோயால், திருமணம் முடிந்த ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுகிறார்.  கணவர் தன்னை ஏமாற்றி திருமணம் முடித்ததில் கணவரிடம் வன்மத்தில் இருக்கிறார் ரங்கமணி. ரங்கமணிக்கு கணவரிடம் இருக்கும் தீராத பகையையும் தான் புண்ணிய பயணத்தில் புனித நதியில் கரைக்க பயணம் ஆரம்பித்துள்ளார்.

குழந்தைகள் இல்லை என்ற நிலையில், ரங்கமணியின் மாமியார் கல்யாண கிருஷ்ணன் என்ற துரையை 8 வயது குழந்தையாக ரங்கமணிக்கு ஸ்வீகார குழந்தையாக கொடுக்கிறார். இப்போது துரையும் பங்கசாட்சியை திருமணம் முடிந்து 10 வருடங்கள் ஆகிய நிலையில் குழந்தைளற்ற தம்பதிகளாகவே  உள்ளனர்.   தங்கள் குடும்பம், வாரிசு அற்று இருப்பதில் ரங்கமணிக்கு பாரிய துயர் உண்டு. வளர்ப்பு மகனை சொந்த மகனாக முழு மனதாக ஏற்க இயலாத சூழலில், தன் மருமகளுக்கு இரத்த உறவில் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் ரங்கமணி.

ரங்கமணியின் மாமானாரின் கொள்ளு தாத்தா, கல்யாணப்பந்தியில் இருந்த முதியவரை சாப்பிட விடாது விரட்டியதால் நிகழ்ந்த சாபத்தால் ரங்கமணி மாமனார் குடும்பத்தில் குழந்தை பாக்கியமே அற்று போகிறது என அறிகிறார். இந்த குடும்பத்தில் அவ்வப்போது பிறந்த குழந்தைகளும் அங்கய சமையல்காரர்களுக்கு பிறந்ததாகவே வரலாறு.  இப்படி இருக்க பயணத்தின் மத்தியில் ஜோஸ்யர் முத்துச்சாமியிடம் தங்கள் குடும்ப ஜோதிடத்தை கொடுக்கிறார் ரங்கமணி. உங்கள் மருமகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டு, மகனுக்கு இல்லை என்கிற குண்டை தூக்கி போடுகிறார் ஜோதிடர்.

ரங்கமணிக்கு காமேஸ்வரனை கண்டதுமே ஒரு சிலிர்ப்பு. என் மகனை போலிருக்கிறாய் என்கிறார். என் மகனாக என் வீட்டில் வந்து வசிக்க வேண்டும் என அழைப்பு விடுப்பார். 8 வயதில் மகனாக வந்த துரையை சொந்த மகனாக ஸ்வீகரிக்க இயலாத மனநிலை கொண்ட ரங்கமணிக்கு;  32 வயது காமேஸ்வரனை மகனாக வர அழைப்பது கொஞ்சம் முரணாகத்தான் உள்ளது. இருப்பினும் காமேஸ்வரனும் ரங்கமணி வீட்டிற்கு வந்து சேர்கிறார்.

காமேஸ்வரனை மாமியார் ரங்கமணியும், மருமகள் பங்கஜவும் ஒரே நேரம் ஒளிவாக ரசித்துக்கொண்டு இருப்பார்கள்.  ஒரு கட்டத்தில் பத்து வருடம் தன் உடன் வாழ்ந்து வரும் தன் சொந்த கணவர், 10 பேரை வேலைக்கு அமர்த்தி கடை நடத்தும் தன் கணவர் துரையை விட அழகாக, ஆளுமையாக,நேசத்திற்குறியவராக, பிரமாண்டமாக ஏன் கடவுளை மாதிரியே காமேஸ்வரன் பங்கஜத்திற்கும் தெரிய ஆரம்பிப்பார். .

தன்னையறியாதே காமேஸ்வரனுக்கும் பங்கஜத்தின் மேல் ஒரு ஈர்ப்பு உருவாகிக் கொண்டு இருக்கும். ஆனால் பங்கஜமோ, ஒருபடி மேலே போய் காமேஸ்வரனை தெய்வபுருஷனாகவே காண ஆரம்பித்திருப்பார். இப்படி நாட்கள் நகர நகர காமேஸ்வரனுக்கும் ஒரு சலிப்பு தட்ட ஆராம்பிக்கிறது,  பல கேள்விகள் மனதில் எழ ஆரம்பிக்கிறது. தன் நண்பர்களை சந்தித்து வருகிறேன் என கிளம்பி,  முத்துசாமியை சந்தித்து காமேஸ்வரன் வீடு திரும்பியிருப்பார். காமேஸ்வரனை காணாது இருப்புக்கொள்ளாத ரங்கமணி காமேஸ்வரனை தேடி காமேஸ்வரன் ஊருக்கு போக காமேஸ்வரன் ரங்கமணி வீட்டுக்கு வந்து சேர்வதும் ஒரே நேரமாக இருக்கிறது.

அன்றைய தினம், மாமியார் இல்லாத தனிமையை பயண்படுத்திக்கொள்ள பங்கஜவும் முடிவெடுக்கிறார். தன் குழந்தை இல்லா கவலையை கதைத்து கதைத்து காமேஸ்வரன் அணைப்பில் சாய்ந்து விடுவார் பங்கஜம்.. விரல்கள் ஒட்டிகொள்ள சுயகட்டுப்பாட்டில் வந்த காமேஸ்வரன்; பங்கஜத்தின் மனநிலையை புரிந்து கொண்டு துரை கடைக்கு சென்று, தான் வந்த விடயத்தை தெரிவித்து வெளியே கிளம்புவான். துரையை நுண்உணர்வற்ற அமைதியான கதாப்பாத்திரமாக அறிமுகப்படுத்தியிருந்தாலும், தினம் இரவு 10 மணிக்கு வரும் துரை அன்று மாலையே வீடு வந்து சேருகிறதில் தன் மனைவி தன்னை விட்டு போயிடுவாரோ என்ற அச்சவும் ஒளிந்து கிடைப்பதை காணலாம்.

திருமணம் முடிந்து 10 வருடம் ஆகியும, மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்த துரையும் பங்கஜவும், அன்று ஒரு நாள் மனம் விட்டு பேசி கூடி கலந்திருப்பார்கள். ரங்கமணியின் இல்லாய்மை, அவர்களுக்கு அந்த வீட்டில் தனிமையான சூழல் கொடுப்பதோடு மட்டுமல்ல; ரங்கமணியின் பிடியில் இருந்தும் விடுதலையும் கிடைத்து இருக்கும். துரை தன் தாயின் பொய்மையை உணர்ந்ததால் என்னவோ, தன் பெற்ற தாய் போலவே வளர்த்த தாய் ரங்கமணியும் தன்னை அடக்கி வைத்திருக்கும் விதம் பற்றி தன் மனைவியிடம் மனம் நொந்து கதைப்பார். அன்றைய தினம் தான், தங்கள் வாழ்க்கையையே ஆரம்பிப்பதாக உணரும் தம்பதிகள் சில நாட்களில் தங்களுக்கு குழந்தை பிறக்கப்போவதை எண்ணி மகிழ்ச்சியாக நாட்களை கடப்பார்கள்.

ஏற்கனவே அந்த குடும்ப வரலாறு அறிந்த ஊர் ஜெனங்கள், கருவுற்ற பங்கஜத்தை காமேஸ்வரனுடன் இணைத்து பேச ஆரம்பிக்கும். இந்த நிலையில் காமேஸ்வரனுக்கு கலக்கம் ஆரம்பித்து விடும்.  அடுத்தும் ஜோசியனை தேடிச்செல்வான். ”அந்த வீட்டு மகனுக்கு குழந்தை பாக்கியம் இருக்காது மருமகளுக்கு உண்டு என நீங்கள் தானே குறிப்பிட்டீர்கள்” என ஜோசியரிடம் கேட்பார். ஜோசியரோ எப்படியும் உன் பெயர்தானே அடிபடுகிறது என்பான் இயல்பாக சிரித்துக்கொண்டு. ஏமாற்று ஜோசியன் என மனதில் நினைத்துக் கொண்டு திரும்புகையில்; ஜோசியரும் காமேஸ்வரனை தன்னுடன் வந்து தங்க கேட்டுக்கொள்வார். ஆனால் காமேஸ்வரன், தன் பழைய வேலையில் சேரவும், திருமணம் முடித்து குழந்தை குட்டிகளுடன் வாழவும் முடிவெடுத்திருப்பார்.

மருமகள் இடுப்பை வளைத்து கோலம் போடுகையில், மாமியார் ரங்கமணிக்கும் தோன்றுவது “நான் இதோட புருஷனா இருந்திருக்க கூடாதோ”.என்று ரங்கமணி தன் முதல் பார்வையிலே காமேஸ்வரனனின் புறம் கையை உற்று பார்க்க ஆசைப்படுவார். இருந்தாலும் பார்க்கும் போதெல்லாம் “என் பிள்ளை மாதிரி இருக்கிறான்” என உருகுவதும், எனக்கேது மகன் என்று உடன் மறுக்கும் சிந்தனையும் ….,காமேஸ்வரனை கண்டதும் முதுகுத்தண்டு ஒரு தடவை குலுக்கிற்று……. இன்னொரு இடத்தில் காமேஸ்வரனை பார்த்து என் கூடப்பிறந்தவன் மாதிரி என்றாள் ரங்கமணி.

இதே ரங்கமணிக்கு அவனை நீ என்று சொல்லும் போதே புல்லரித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். “உன்னை பார்த்தால் பிள்ளை மாதிரி இருக்கு. இனி இரெயில் சமையல்காரன் இல்லை..எங்க வீட்டிலெ என் பிள்ளையாக இருக்கலாம்” என்றும் அழைக்கிறார் ரங்கமணி. காமேஸ்வரனும் என்னமோ, இந்த தொடர்பு எங்கேயோ எப்பவோ ஆரம்பிச்ச மாதிரி உள்ளுக்குள் ஒரு ஆதங்கமாக இருக்கு…..என்கிறான் துவக்கத்தில்.

“நல்லூரம்மாவுக்கு ஆதங்கம். இரவல் பிள்ளையாகவே வம்சம் வளர்றதேன்னு- நீர் பிரம்மசாரி, போக்கில்லை. நல்ல சமர்த்தா இருக்கீர்……யார் தோஷம் சொல்ல போறா…மகாபாரத காலத்துக்கு முன்னாலேயே நடந்திருக்கு. ஒரு ரிஷிக்கு பிள்ளை இல்லேன்னா இன்னொரு ரிஷியை கூப்பிட்டு சந்ததி உண்டாக்கச் சொல்றது வழக்கமா இருந்திருக்கு……..பிரகிருதிக்கு எத்தனையோ ஆசை ….ரங்கமணி மனசும் இப்படி ஏதாவது கிறுக்கிண்டிருந்தா?” இப்படி உசுப்பேத்தும் முத்துசாமி ஜோசியர்.

“துரை சாருக்கு நிச்சயமாப் பிறக்கத்தான் போறது.”…..என்பதில் இருந்து துரையை சகோதரனாக பாவிக்க காமேஸ்வரனின் மனம் ஒத்து வரவில்லை என்பதே பொருட்படுத்த வேண்டியுள்ளது.

மாமியார் இல்லாத தருணத்தை பங்கஜம் பயண்படுத்த நினைப்பதும்…. காமேஸ்வரன் தான் வந்த விவரத்தை கடைக்கு போய் துரையிடம் தெரிவித்து அந்த சூழலில் இருந்து தப்பித்து கொண்டதும் அன்று இரவு பங்ஜவும் கணவரும் 10 வருடம் தாங்கள் கண்டிராத தாம்பத்தியத்தை அனுபவிப்பதுமாக பங்கஜத்தின் நிலையில்லா குணத்தையும் வெளிப்படுத்தி, காமேஸ்வரனுக்கு மகுடம் சூட்டுகிறார் கதாசிரியர்.

 

கடைசியாக ரங்கமணியிடம் காமேஸ்வரன் விடை பெறுகையில் ரங்கமணி முகத்தில் கிலி, குற்றச்சாட்டு, குற்ற உணர்வு அதிர்ச்சி அனைத்தையும் பார்க்கிறான். ஒருவனை மகனாக நினைப்பதாக கூறுவதாலோ, மகனாக வருவதாலோ தாய் – மகன் உறவு மலர்வது இல்லை என சொல்கிறது நாவல். புதிய உறவை ஏற்படுத்தி கொள்ள மனது எடுக்கும் தந்திரமாகவே சொல்லிக் கொண்டு போகிறார் கதை ஆசிரியர்

“பங்கஜத்திற்கு நான் என்ன பதில் சொல்வேன்…நீ விட்டுட்டுப்போயிட்டேன்னா….அவளுக்கு உலுக்கினாப்பலத்தான் இருக்கும்” போன்ற வார்த்தைகளை ரங்கமணி சொல்லும் போதும், அது உண்மையை விட ரங்கமணி என்ற பெண்ணின் மடக்கு தந்திரமாகத்தான் இருக்கும் என உணர்கிறான் காமேஸ்வரன். ரங்கமணியை பற்றி நண்பன் இளங்கண்ணனிடம் ‘துரையின் அம்மா’ என்றே குறிப்பிடுகிறான். அதிலிருந்து ரங்க மணியை தன் தாயாக விக்னேஸ்வரன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றே புரிந்து கொள்ள முடியும். .

52 வயதில் ஒரு இளம் ஆணிடம் தோன்றும் மோகத்தை மறைத்து, வளர்ப்பு மகனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து, மருமகளுக்கு குழந்தை ஆசையை காட்டி தன் விருப்பத்திற்காக தந்திரமாக பணிய வைத்து,மருமகளை பகடையாக்கி காமேஸ்வரனுக்கு அம்மா என்ற பாசத்தைச்சொல்லி வீட்டில் தங்க வைத்து, இப்படி ரங்கமணி தன் பொருந்தாத ஆசையை, தன் ஆளுகையை தனக்கு சுற்றும் வாழ்பவர்கள் மேல் நுட்பமாக செலுத்தும் திறமை வாய்ந்தவராகவும் தந்திரசாலியாகவும் உள்ளார்.

பத்து வருடம் ஒரு தம்பதி, தம்பதியாக வாழ வாய்ப்பு அமைத்து கொடுக்காத ரங்கமணி, காமேஸ்வரனை வீட்டில் அழைத்து வரும் நோக்கம் காமேஸ்வரனுக்கு விளங்கியதும், தன் நேர்மைக்கு விளைந்த சோதனை என அறிந்து, ஆண்களுக்குறிய ஆண்மையுடன் தப்பித்து தன் வழிக்கு புறப்பட்டு செல்கிறார். தன் கணவரால் தனக்கு குழந்தை தர இயலாததால் விளைந்த கோபத்தை மருமகள் வழியாக குழந்தை பெற்று வன்மம் தீர்த்து கொள்ள ரங்கமணி எடுத்த நெறிகெட்ட முடிவை மிகவும் நுட்பமாக எழுதியுள்ளார் ஜானகிராமன்.

காமேஸ்வரன் என்ற கதாபாத்திரத்தை இருபெண்கள் விரித்த வலையிலும் விழாத மாமனிதனாக படைத்துள்ளது கொஞ்சம் ஆண் ஆதிக்க சிந்தையின் வெளிப்பாடு தானே?

பெண்கள் பக்தி கடவுள், ஆசாரம் பதி- பக்தி என இருந்தாலும் இச்சை என்றதும் சட்டென்று விழும் அபலத்தனத்தை , அல்லது தன் மோகத்தை அடைய கையாளும் முறையைப் பற்றிக் கவலைப்படாது, அதை மறைக்க ‘மகனைப்போல’, ‘ஆன்மீகம்’, தெய்வபுருஷன் என விளம்பும் பொய்மையும் விளங்க செய்கிறார் கதாசிரியர்.

இது போன்ற கதைகள் காமேஸ்வரன் என்ற ஆண் பிம்பத்தை புகழ் பாடவா அல்லது பெண்களின் அசாதாரண ஆசைகளும் அதை அடைய அவர்கள் கையாளும் தந்திரங்களைப் பற்றி சமூகத்தை புரியவைக்க எழுதினாரா?

எழுதிய விதம் ஆர்பாட்டமில்லாது அழகுடன் ஒழுகினாலும், எடுத்த கருத்தாக்கம் சமூகத்திற்கு தரும் பங்கு தான் என்ன?

வாசித்தே தீரவேண்டும் என்ற உன்றுதலில், விரச ரசத்துடன் தான் வாசித்து முடித்தேன். சீரியல் கதைகளின் உறவிடம் 79 களிலே துவங்கியுள்ளது.  ஆசாரம், அனுஷ்டானம், பக்தி மார்கம் என உன்னத மனநிலையில் இருப்பவர்களிடம் இருக்கும் கீழ் புத்திகளையும், அவல நிலையையும், மனத்துயரால் விளைந்த மனப்பிறள்வு பற்றியும் எழுத தைரியம் வேண்டும். அந்த அசராத தைரியத்திற்காக ஜானகிராமனை பாராட்டலாம்.

(நடு இணைய இதழில் வந்த கட்டுரை)