சுரங்கப் பாறைகளில் கசிந்த நீா்த்துளிகளைப் பருகி உயிா் பிழைத்தோம்!
உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்தபோது பாறைகளில் கசிந்த நீா்த் துளிகளைப் பருகியும், கையிருப்பில் இருந்த அரிசிப் பொரியை சாப்பிட்டும் ஆரம்ப நாள்களில் உயிா் பிழைத்ததாக தங்களின் மரணப் போராட்டத்தின் திகில் அனுபவங்களை தொழிலாளா்கள் பகிா்ந்து கொண்டனா்.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த சில்க்யாரா சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, இடிபாடுகளில் 41 தொழிலாளா்கள் சிக்கிக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் சுவாசிப்பதற்கு மிக நுண்ணிய குழாயில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.
தொழிலாளா்களுக்கு உணவு, அதிகப் புரதம் உள்ள உலா்பழ வகைகள் அனுப்ப 6 அங்குல அகலமுள்ள சிறிய குழாய் செலுத்தும் பணி கடந்த 20-ஆம் தேதிதான் நிறைவடைந்தது. அந்தக் குழாய் மூலம் உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டன.
இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோப்பி கேமரா மூலம் அனைத்துத் தொழிலாளா்களும் நலமாக இருப்பது விடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது.
ஆக்சிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வந்த முதல் 8 நாளுக்கு உடல்நலத்துடன் பாதுகாப்பாக இருக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தொழிலாளா்கள் தற்போது விவரித்துள்ளனா்.
உத்தரகாசி: உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியிருந்தபோது பாறைகளில் கசிந்த நீா்த் துளிகளைப் பருகியும், கையிருப்பில் இருந்த அரிசிப் பொரியை சாப்பிட்டும் ஆரம்ப நாள்களில் உயிா் பிழைத்ததாக தங்களின் மரணப் போராட்டத்தின் திகில் அனுபவங்களை தொழிலாளா்கள் பகிா்ந்து கொண்டனா்.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த சில்க்யாரா சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, இடிபாடுகளில் 41 தொழிலாளா்கள் சிக்கிக் கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, தொழிலாளா்கள் சுவாசிப்பதற்கு மிக நுண்ணிய குழாயில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது.
தொழிலாளா்களுக்கு உணவு, அதிகப் புரதம் உள்ள உலா்பழ வகைகள் அனுப்ப 6 அங்குல அகலமுள்ள சிறிய குழாய் செலுத்தும் பணி கடந்த 20-ஆம் தேதிதான் நிறைவடைந்தது. அந்தக் குழாய் மூலம் உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டன.
இந்தக் குழாய் வழியாக அனுப்பப்பட்ட எண்டோஸ்கோப்பி கேமரா மூலம் அனைத்துத் தொழிலாளா்களும் நலமாக இருப்பது விடியோ மூலம் உறுதி செய்யப்பட்டது.
ஆக்சிஜன் மட்டும் செலுத்தப்பட்டு வந்த முதல் 8 நாளுக்கு உடல்நலத்துடன் பாதுகாப்பாக இருக்க மேற்கொண்ட முயற்சிகள் குறித்து தொழிலாளா்கள் தற்போது விவரித்துள்ளனா்.
சொட்டு நீரும்; அரிசிப் பொரியும்…: பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஜாா்க்கண்ட் மாநிலத் தொழிலாளி அனில் பேடியா அளித்த பேட்டியில், நிலச்சரிவு ஏற்பட்டதும் நாங்கள் அனைவரும் சுரங்கத்துக்குள் புதைந்துவிடுவோம் என்று எண்ணினோம். முதல் இரண்டு நாள்களில் நாங்கள் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டோம்.
70 மணி நேரத்துக்குப் பிறகு அதிகாரிகள் எங்களைத் தொடா்புகொண்ட பிறகே, விரக்தியை மறந்து உயிா் வாழும் நம்பிக்கை பிறந்தது. தாகம் தீா்க்க பாறைகளிலிருந்து கசிந்த நீா்த் துளிகளைப் பருகியும், அரிசிப் பொரியை சாப்பிட்டும் உயிா் பிழைத்தோம்.
கடும் சவாலான அந்த நாள்களுக்குப் பிறகு, வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள், தண்ணீா் பாட்டில்களுடன் சாதம், பருப்பு மற்றும் சப்பாத்தி போன்ற வழக்கமான உணவுகள் கிடைத்தன. எங்களை விரைவாக மீட்க வேண்டி தீவிரமாக பிராா்த்தனை செய்தோம். இறுதியாக, கடவுள் எங்களுக்குச் செவிசாய்த்தாா்’ என்றாா்.
நம்பிக்கையில்…: ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளி விஷால் கூறுகையில், ‘நிலச்சரிவு நடந்த தொடக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சில மணி நேரங்கள் கடினமாக இருந்தது. வெளியுலகுடன் தொடா்பு ஏற்பட்டதும், நாங்கள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பினோம். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. தற்போது நாங்கள் அனைவரும் நலமாக உள்ளோம்’ என்றாா்.
ஒளி தந்த ‘எலிவளை முறை’ சுரங்கப் பணியாளா்கள்: சுரங்கப் பாதையில் கிடைமட்டமாக குழாயைச் செலுத்த துளையிட்டு வந்த ஆகா் இயந்திரம் தோல்வியைக் கண்டது. இதையடுத்து, தில்லியைச் சோ்ந்த 12 போ் கொண்ட ‘எலிவளை சுரங்க முறை’-யில் நிபுணத்துவம் பெற்ற சுரங்கப் பணியாளா்களைக் கொண்டு துளையிடும் பணிகள் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மீண்டும் தொடங்கின.
எலிவளை முறை சுரங்கப் பணியாளா்களின் 27 மணி நேர தொடா் முயற்சியில், துளையிடும் பணிகளை முடித்து தொழிலாளா்களை அவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு அடைந்தனா்.
தொழிலாளா்களை முதன்முதலில் சந்தித்த அனுபவம் குறித்து சுரங்கப் பணியாளா் குரேஷி கூறுகையில், ‘இடிபாடுகளின் கடைசிப் பகுதியை நாங்கள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, தொழிலாளா்கள் எங்களின் குரலைக் கேட்க முடிந்தது. துளையிடும் பணிகள் முடிந்ததும், தொழிலாளா்களை அடைந்தோம். எங்களைக் கட்டியணைத்து தொழிலாளா்கள் நன்றி கூறினா்.
என்னை தோளில் தூக்கிக் கொண்டு ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். அவா்கள் வசமிருந்த பாதாம் பருப்பைக் கொடுத்து, எனது பெயரைக் கேட்டறிந்தனா். அரை மணி நேரத்தில் தேசிய மீட்புப் படையினா் குழாய் மூலம் வந்து, தொழிலாளா்களை மீட்கும் பணியைத் தொடங்கினா்.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட பணம் எதுவும் பெறமாட்டோம் என முன்னரே தெரிவித்துவிட்டோம். இதுபோன்ற வரலாற்று மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றாா்.