விறுவிறுப்பாக நடைபெறும் தெலங்கானா தேர்தல்: பிரபலங்கள் வாக்குப்பதிவு!
தெலங்கானா சட்டப் பேரவைக்கான தேர்தல் ஒரே கட்டமாக வியாழக்கிழமை காலை தொடங்கியது.
119 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இந்தத் தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி ஏறத்தாழ 8.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மத்திய அமைச்சர் மற்றும் பாஜக மாநில தலைவர் ஜி.கிஷன் ரெட்டி, பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமராவ், அவரது சகோதரி எம்எல்சி கவிதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அஸாதுதீன் ஒவைஸி ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கியதுமே தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
நடிகர்கள் சிரஞ்சீவி, வெங்கடேஷ் மற்றும் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
தெலங்கானா முதல்வர் கேசிஆரின் மகளான கவிதா தனது வாக்கைப் பஞ்சாரா மலை தொகுதி வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.
அவர், “தெலங்கானா மக்கள் அனைவரும் முன்வந்து வாக்களைப் பதிவு செய்ய வேண்டும். நீங்கள் வாக்குப் பதிவிட்டால்தான் எங்களைக் கேள்வி கேட்க முடியும். வாக்குப் பதிவு செய்தால், அரசியல்வாதிகளை பொறுப்போடு நடக்கச் செய்ய இயலும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தலைவர் கிஷன் ரெட்டி, வாக்குகளைப் பதிவு செய்யாமல் அரசியல் அமைப்பை விமர்சிக்க உரிமையில்லை. மக்கள் பணம், மது ஆகியவற்றுக்கு விலை போகாமல் பயமில்லாமல் வாக்களிக்க முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தங்கள் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் நாளில் வாக்குக் கேட்டதாகக் காங்கிரஸ் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளது.