மதுரங்குளி குளத்திலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

புத்தளம் – மதுரங்குளி பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மதுரங்குளி, ரந்தியாகம பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தோபர் சாமர பிய கெலும் (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி – முருகன் கோயிலுக்குப் பின் பக்கமாக உள்ள சிறிய குளத்தில் சடலமொன்று மிதப்பதாகப் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அங்கு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த முந்தல் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி, அங்கு மரண விசாரணையை மேற்கொண்டார்.
அத்துடன் அந்தச் சடலம் புத்தளம் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போது உயிரிழந்த நபரின் உடல் அவயங்கள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, திறந்த தீர்ப்பு வழங்கி சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.