பரந்தூர்: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிக்கும் ஏகனாபுரம் கிராம மக்கள்!
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
சுமார் 5,746 ஏக்கரில் பசுமை விமான நிலையம் அமைந்தால் பெருமளவு நீர் ஆதாரங்களும் குடியிருப்புகளும் பாதிக்கும் என்று பரந்தூர் அருகே உள்ள ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 493 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விமான நிலையம் அமைக்கத் தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணியை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏகனாபுரம் கிராம மக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காலவரையின்றி பள்ளியை புறக்கணித்துள்ளனர்.
பள்ளியில் பயிலும் 117 மாணவர்களில் ஒருவர்கூட பள்ளிக்கு வராததால் பள்ளி வளாகமும் வகுப்பறைகளும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. ஆசிரியர்கள் மட்டுமே வகுப்பறையில் அமர்ந்துள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்காக காலையில் செய்யப்பட்ட காலை சிற்றுண்டி உணவு வீணாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.