தேசிய தேர்தல்களை விரைந்து நடத்துங்கள்! – ரணிலிடம் சந்திரிகா வலியுறுத்து.
“மக்கள் ஆணையுள்ள பலமிக்க தலைவரையும், அரசையும் நாட்டு மக்கள் மாத்திரமல்லர் சர்வதேசம் கூட விரும்புகின்றது. எனவே, தேசிய தேர்தல்களை விரைந்து நடத்த வேண்டிய கட்டாயத்துக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வந்துள்ளார்.”
இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-
“அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், பிரதமர் தினேஷ் குணவர்த்தனவும் வெவ்வேறு இடங்களில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் எந்த மாதம் தேர்தல் நடைபெறும் என்று உறுதியாகக் கூறவில்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அந்தத் தேர்தல் இன்னமும் நடைபெறாமல் இருக்கின்றது. அந்த நிலைதான் ஜனாதிபதித் தேர்தலுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் நடக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது.
எனவே, வாயால் மாத்திரம் வாக்குறுதிகளை வழங்காமல் தேசிய தேர்தல்களை ஜனாதிபதி விரைந்து நடத்த வேண்டும்.” – என்றார்.