மிக்ஜம் புயல்: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!
வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமாா் 510 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் (டிச. 3) தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். டிச. 5-ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மிக்ஜம்’ என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் டிச. 5 ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.