பதற்ற நிலையை அடுத்து களனிப் பல்கலைக்கு பூட்டு.

களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பிரிவுகளும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும் அதேவேளை, அனைத்து மாணவர்களும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு முன்னர் அந்தந்த விடுதிகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்றிரவு உறங்கிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளது.
மேலும் மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இடையே நிலவிய அமைதியற்ற சூழ்நிலையால், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.