யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி விவகாரம்: இன்று மீண்டும் விசாரணை!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று மீண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறப்படாமல், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், தூபி அமைப்புக்கான நிதி கையாளுகை தொடர்பிலும் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் உட்பட மூன்று பேரால் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
தூபி அமைப்பதற்காகப் பல்கலைக்கழக மாணவர்களால் நிதி சேகரிக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களுடன், அதனை உறுதிப்படுத்துவதற்கு அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரிகளையும், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளையும் இன்று விசாரணைகளுக்குச் சமூகமளிக்குமாறு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சிரேஷ்ட பொருளாளரும், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர் ஒருவரும், தூபி அமைக்கப்பட்ட வேளையில் இருந்த மாணவர் ஒன்றியத் தலைவரும் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ள விசாரணைகளுக்காகச் சென்றுள்ளனர்.