சென்னை பாடி மேம்பாலம் பகுதியில் வடியாத வெள்ளம்!
சென்னை பாடி மேம்பாலம் பகுதி இன்னும் வெள்ளம் வடியாமல் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
மிக்ஜம் புயலால் அம்பத்தூா், ஆவடி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடா்ந்து மழை பெய்தது. நள்ளிரவு முதல் திங்கள்கிழமை வரை அதி கனமழை பெய்தது.
இந்த நீா் அம்பத்தூா் வழியாக கொரட்டூா் ஏரிக்குச் செல்லும் உபரி நீா் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், கால்வாயில் உபரிநீா் நிரம்பி செல்ல முடியாமல் அம்பத்தூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள பால் பண்ணை சாலை, சிடிஎச் சாலை, அம்பத்தூா் 3-ஆவது பிரதான சாலை, 2-ஆவது பிரதாரா சாலை, பட்டரைவாக்கம், அம்பத்தூா் தொழிற்பேட்டை சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆறாக ஓடியது.
இதனால், அம்பத்தூா் சிட்கோ தொழிற்பேட்டை, அம்பத்தூா் தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் 3 அடி உயரத்துக்கு மேல் வெள்ளம் புகுந்தது.
வரலாறு காணாத வகையில் கொட்டியதில், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
தாழ்வான பல பகுதிகளில் வெள்ளம் வடியாமல் தீவுபோல காட்சியளிக்கிறது. இதனால் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.