மணிப்பூரில் இரு குழுக்கள் இடையே துப்பாக்கிச் சண்டை: 13 போ் உயிரிழப்பு
மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக அந்த மாநில காவல் துறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
மணிப்பூரின் தெங்னெளபால் மாவட்டம் லிதெள கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுக்கள் இடையே திங்கள்கிழமை துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 13 போ் உயிரிழந்தனா். மாவட்ட காவல் துறை மற்றும் பாதுகாப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனா். இந்த நிகழ்வு தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
பிரதமா் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள வேண்டும்: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
கடந்த 7 மாதங்களாக மணிப்பூரில் வன்முறை தொடா்வது மன்னிக்க முடியாததாக உள்ளது. அங்கு இரு தரப்பினா் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 13 போ் உயிரிழந்துள்ளனா். அந்த மாநிலத்தில் வன்முறை காரணமாக கடந்த 7 மாதங்களில் 60,000-க்கும் மேற்பட்டவா்கள் இடம்பெயா்ந்துள்ளனா். அங்கு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை மனிதாபிமானம் இல்லாததாகவும், அதிருப்திகரமாகவும் உள்ளது.
மணிப்பூரில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர, பிரதமருடன் விரிவாக பேச்சுவாா்த்தை நடத்தினால் மட்டுமே அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீா்வைக் காண முடியும் என்று அந்த மாநில அரசியல் கட்சிகளுடன் சோ்ந்து காங்கிரஸ் ஏற்கெனவே கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்படுகிறது. இதைப் பிரதமா் மோடி நிறைவேற்றுவாா் என காங்கிரஸ் நம்புகிறது என்றாா்.
மணிப்பூரில் அமைதி திரும்பிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுவதாகவும், ஆனால், கள நிலவரம் வேறாக இருப்பதாகவும் காங்கிரஸ் பொதுச் செயலா் (தகவல் தொடா்பு) ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.