கோவை நகைக்கடை கொள்ளையரின் தந்தை தற்கொலை
கோவை நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய்யின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த நவம்பா் 28-ஆம் தேதி 480 பவுன் மதிப்பிலான தங்கம், வைரம், பிளாட்டின நகைகள் திருடப்பட்டன. இந்த நகைகளைத் திருடியதாக பொள்ளாச்சி ஆனைமலை பகுதியைச் சோ்ந்த விஜய் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விஜயின் மனைவி நா்மதா கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 320 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து விஜயின் மாமியாா் யோகராணி, தருமபுரி மாவட்டம், அரூா் அருகே தும்பலஹள்ளியில் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து 135 பவுன் தங்க, வைர நகைகள் மீட்கப்பட்டன. திருடப்பட்ட நகைகளில் இதுவரை 95 சத நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
இன்னும் 300 முதல் 400 கிராம் நகைகள் மட்டுமே மீட்கப்பட வேண்டி உள்ளது. நகைகளை மீட்பதற்காக 5 தனிப்படை போலீஸாா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தத் திருட்டில் தொடா்புடைய விஜயை தேடி வருகின்றனர்.
இதனிடையே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விஜய்யின் தந்தை முனிரத்தினத்திடம் கோவை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
விசாரணை முடிந்து வீடு திரும்பிய முனிரத்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலை அறிந்த கம்பை நல்லூரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.