ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளிலும் லேசான நில அதிர்வு
ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர், பெரியவரிகம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் காலை 7.30 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அப்போது வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் வாணியம்பாடி செட்டியப்பனூர், ஜாப்ராபாத், நியூடவுன் அம்பூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் அப்போது அம்பூர்பேட்டை பகுதியில் கோபிசங்கர் என்பவரின் வீட்டில் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. வீட்டில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதால் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதையடுத்து, வருவாய்த் துறையினர் மற்றும் புவியியல் ஆராய்ச்சி வல்லுநர்கள் அதன் காரணத்தைக் கண்டறிந்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஏற்கனவே, செங்கல்பட்டு உள்ளிட்ட சில பகுதிகளிலும் இதே நேரத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியிலும் 3.1 என்ற ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தேசிய நில அளவியல் மையம் தெரிவித்துள்ளது.