மத்ரஸா மாணவனின் மரணம் ,கொலையா? தற்கொலையா? மரண விசாரணையில் தெரிந்தது என்ன?

குரான் கற்க வந்த முஹம்மது முஷாபி என்ற மாணவர் உயிரிழந்துள்ளார்.
‘என் மகன் என்னை இரண்டு முறை அம்மா அம்மா என்று அழைத்தான்’
என கதறியழும் தாய் ….. மரண விசாரணை முடிவு ?

அம்பாறை கல்முனை இஸ்லாமாபாத் நன்னடத்தை இல்லத்தில் 14 வயதுடைய தருசான் மரணம் அடைந்த சூடு தணிவதற்கு முன்னரே , அம்பாறை சாய்ந்தமருது சபிலுல் ரஸூதி மத்ரஸா பாடசாலையின் மாணவன் உயிரிழந்தமையால் சாய்ந்தமருது மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

மத்ரஸா பாடசாலையில் கல்வி பயின்ற காத்தான்குடி ஹனிபா மௌலவி வீதியைச் சேர்ந்த முஹம்மட் முஷாபி எனும் மாணவன் ,  டிசம்பர் 5ஆம் திகதி மாலை மரணமடைந்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மரணம் தற்கொலையா? அல்லது தவறான கொலையா? என்பதை கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


‘எங்கள் மகன் இப்படி இறக்க எந்த காரணமும் இல்லை’
– தாய்

தனது 13 வயது மகன் மதக் கல்வி கற்க சென்றபோது இறந்ததால் அவரது தந்தை அதிர்ச்சி அடைந்துள்ளார். மொஹமுது முஸம்மில் என்ற சிறுவனின் தந்தை பாதணிகளை தயாரிப்பதை தொழிலாக கொண்டுள்ளார்.

அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் ஆண் குழந்தைகள். மூத்த மகனே மதக் கல்வி படிக்க மதரஸா சென்றிருக்கிறான்.

“என்னுடைய மகன் இந்தப் பள்ளிக்குச் சென்று சுமார் இரண்டு மாதங்களாகிறது, அவர் தனது விருப்பப்படிதான் இந்தப் பள்ளிக்குச் சென்றார், எங்கள் மகன் மகிழ்ச்சியாக இருந்தான், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகனுடன் பேசுவோம், சில நாட்களில் மகனை பார்க்கச் செல்வோம். இச்சம்பவம் கடந்த 5ம் தேதி மாலை நடந்தது. பள்ளியை நடத்தும் மௌலவி எஸ்.எஸ்.எம்.சனாஷ் என்பவர் இரவு ஒன்பது மணியளவில் போன் செய்து மகனுக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் , முடிந்தால் வாருங்கள்” என சொன்னதாக மொஹமுது முஸம்மில் தெரிவித்தார்.     ‘என் மகன் என்னை இரண்டு முறை அம்மா அம்மா என்று அழைத்தான்’

“நானும் எனது மனைவியும் குடும்ப உறவினர்களுடன் சாய்ந்தமருது மத்ரஸா பாடசாலைக்கு வந்து குழந்தையைத் தேடியபோதும் பிள்ளை அங்கு இல்லை. பின்னர் சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு சென்றோம். அப்போதுதான் எங்கள் குழந்தை இறந்தது தெரிய வந்தது. இந்த மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எங்கள் மகன் இப்படி இறந்ததற்கு எந்த காரணமும் இல்லை. இது குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றார் குழந்தையின் தந்தை.

“டிசம்பர் இரண்டாம் தேதி சனிக்கிழமை என் மகனுடன் போனில் பேசினேன். மகனுடன் பேச  மௌலவியின் தொலைபேசிக்குத்தான் போண் பண்ணுவோம். அப்போது என் மகனுக்கு புத்தகங்களை கொண்டு வருமாறு மவ்லவி என்னிடம் கூறினார். நான் என் மகனுடன் பேச விடுங்கள் என்று கேட்டேன், அவர் முடியாது என்று கூறினார். நான் மகனுடன் பேச வேண்டும் என்று வலியுறுத்தினேன். பின்னர் போனை மகனிடம் கொடுத்தார். என் மகன் என்னை இரண்டு முறை அம்மா அம்மா என்று அழைத்தான். அப்போதுதான் மௌலவி போனை மகனிடமிருந்து எடுத்துக் கொண்டார். அதன் பின்னர் எனது மகனின் மரணத்த உடலைத்தான் நான் கண்டேன்” என உயிரிழந்த மொஹமட் முஷாபியின் தாயார் பாத்திமா சிபானா அழுதுகொண்டே பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.


உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பு

குழந்தையின் மரணம் சந்தேகத்திற்குரியது என உயிரிழந்தவரின் உறவினரான காத்தான்குடியைச் சேர்ந்த மொஹமட் முகரீம் தெரிவித்துள்ளார்.

குழந்தை இறந்ததை பெற்றோரிடம் கூறாமல் காலதாமதம் செய்தமை, கழிவறையில் தூக்கில் தொங்கியதாக இருந்தால் , மௌலவி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல் அனைத்து நடவடிக்கைகளையும் தானே எடுத்மை ,  குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றமை மற்றும் மேலும் மதரஸா பள்ளியின் சிசிடிவி கேமராவிலுள்ள தரவுகளை நீக்க முயன்றமை ஆகிவை காரணமாக மாணவனின் மரணத்தில் மேலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

இதனால் ஆத்திரமடைந்த சாய்ந்தமருது கிராம மக்கள்,  சபிலுல் ரஸூதி மத்ரஸா பள்ளிக்கு வந்து மௌலவிக்கு எதிர்ப்பு தெரிவித்தமையால் , போலீசார் மௌலவியை கைது செய்தனர்.


பிரேத பரிசோதனையில் தெரியவந்தது என்ன?

கல்முனை நீதவானின் ஸ்தல விசாரணையின் பின்னர், மரணம் தொடர்பான பிரேத பரிசோதனைக்காக, அம்பாறை பொது வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் டொக்டர் சி.டி. மகாநாமாவிடம் உடல் கையளிக்கப்பட்டது.

அதன்படி நேற்று (டிசம்பர் 7) காலை அம்பாறை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் இறந்த மாணவனது மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மரண விசாரணையின் பின்னர் , வெளிப்படையான தீர்ப்பை அளித்த, தடயவியல் நிபுணர் சி.டி. மஹாநாம , இது கழுத்து அழுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மரணத்தில் சந்தேகத்திற்கு இடமான பல இடங்கள் உள்ளதால் இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த விசேட பொலிஸ் குழுவும் குற்றப் புலனாய்வு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அம்பாறை பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தகவலின்படி, சபிலுல் ரஸூதி மத்ரஸா பாடசாலையின் மௌலவி சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கல்முனை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்த மௌலவி , இச் சிறுவனை இதற்கு முன்னரும் கொடூரமான முறையில் தாக்கியதாக சிறுவனின் பெற்றோரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினாலும் , சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு அவ்வாறான முறைப்பாடுகள் முன்னர் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மதரஸா பள்ளிகள் குர்ஆன் உட்பட இஸ்லாத்தின் மத நடைமுறைகள் பற்றி கற்பிக்கும் இடமாகும். இவ்வாறான இடத்தில் கல்வி கற்கும் பிள்ளைகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவது பொருத்தமானதல்ல என சமந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி ஒருவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மூத்த மகனின் மரணத்தால் தாய், தந்தை மற்றும் உறவினர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். இந்த மரணம் தற்கொலையா? தவறான கொலையா? என்பது புதிய தொழில்நுட்பத்துடன் பொலிசார் நடத்தும் விசாரணைகளின் அடிப்படையிலேயே  கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.