மிக்ஜாம் புயல்: ரூ.6000 நிவாரணத் தொகை… முதல்வர் அறிவிப்பு
மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கிட முடிவெடுக்கப்பட்டுள்ளது .
அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கடவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூபாய் 17 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் (Perennial crops and trees) சேதமுற்றிருப்பின் (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, ரூபாய் 22,500/- ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். மழையினால் பாதிக்கப்பட்ட (33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக) மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410/-லிருந்து, ரூ.8,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும் உத்த்ரவிட்டுள்ளார்.
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000/- என்றிருந்ததை, ரூ.37,500/-ஆக உயர்த்தி வழங்கிடவும், வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக 3,000/- என்றிருந்ததை. ரூ.4,000/- உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), ரூ.32,000/-லிருந்து, ரூ.50 ஆயிரமாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாகவும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஒரு இலட்சமாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7.50 இலட்சமாகவும் உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.