காஸா போரில் பொதுமக்களிடையே அதிக மரணம் : அமெரிக்கா கவலை.
காஸாவில் நடத்தப்படும் தாக்குதல்களில் பொதுமக்கள் அதிகமானோர் மாண்டுபோவது குறித்து அமெரிக்கா இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலைக் கடுமையாகக் குறைகூறியுள்ளது.
பொதுமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) சுட்டினார்.
ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவைத் துடைத்தொழிக்க ஆன அனைத்தையும் செய்யவிருப்பதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் அது கூறியிருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden), இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவிடமும் (Benjamin Netanyahu), ஜோர்தானிய மன்னர் அப்துல்லாவிடமும் (Abdullah) தனித்தனியாகத் தொலைபேசி வழி பேசியிருக்கிறார்.
பாதுகாப்பான பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென அவர் அப்போது இருவரிடமும் வலியுறுத்தினார்.
போர் தொடங்கியது முதல் 17,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மாண்டனர்.
சுமார் 46,000 பேர் காயமுற்றனர் என்கிறது காஸாவின் சுகாதார அமைச்சு.
அக்டோபர் 7ஆம் தேதி தென் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
240 பேர் பிணைபிடிக்கப்பட்டனர் என்கிறது இஸ்ரேல் தரப்பு.
தரைத் தாக்குதல்கள் தொடங்கிய பிறகு தனது வீரர்களில் 92 பேர் மாண்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.