சென்னை மக்களே உஷார்.. வீடு, கார்களை குறி வைக்கும் திருட்டு கும்பல்.. பகீர் எச்சரிக்கை
சென்னையில் மழைநீரில் மூழ்கியதால் மக்கள் வெளியேறிய வீடுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கிய கார்களை குறிவைத்து திருட்டு நடைபெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பெருமழை, சென்னையின் பல முக்கிய பகுதிகளை பதம் பார்த்துவிட்டது. சுமார் 36 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால், பள்ளிக்கரணை, வேளச்சேரி, வியாசர்பாடி, மேடவாக்கம், முடிச்சூர் பகுதிகளில் இருக்கும் வீடுகளை முதல் மாடி வரை பெருமழை வெள்ளம் மூழ்கடித்தது.
வீடுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கிப்போக, பல்லாயிரம் மக்கள் மொட்டை மாடிகளுக்குச் சென்று உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்கள். நாலாபுறமும் தண்ணீர் இருந்தாலும், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவித்த பலர், அங்கிருந்து எப்படியோ வேறு இடங்களுக்கு வெளியேறிவிட்டனர்.
மேலும் பலர் தண்ணீரில் மூழ்காத பகுதிகளில் வசிக்கும் உறவினர்கள் வீடுகளுக்கும், சிலர் சொந்த ஊர்களுக்கும் சென்றுவிட்டனர். இவர்கள் வீடுகளை பூட்டிவிட்டு, கார்களை அம்போவென அப்படியப்படியே விட்டுவிட்டு வெளியேறி விட்டார்கள். பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கிய கார்கள் ஆங்காங்கே நின்று கிடக்கின்றன.
ஆயிரக்கணக்கான வீடுகளும், வாகனங்களும் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. அப்படி கைவிடப்பட்ட வீடுகளையும், கார்களையும் குறிவைத்து திருட்டுகள் நடைபெற்றுவருவதாக வெளியாகியுள்ளது ஓர் அதிர்ச்சித் தகவல்.
உயிர்தப்பினால் போதும் என்ற மனநிலையில் வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்த பொருட்கள், நகைகள் என எதையும் பெருமழை வெள்ளத்தில் பலரால் எடுக்க முடியவில்லை. கையில் கிடைத்த சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு, கிடைத்ததை எடுத்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களுக்கு பயணப்பட்டுவிட்டார்கள். இவ்வாறு ஆளில்லாத வீடுகளை நோட்டமிடும் திருடர்கள் கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து கிடைக்கும் பொருட்களை திருடிச் செல்வதாக வெளியாகியுள்ளது தகவல்.
மழை வெள்ளத்தில் யாரும் வரமாட்டார்கள் என்பதை தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொண்ட திருடர்கள், புறநகர் பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளைத்தான் குறிவைப்பதாக கூறுகின்றன தகவல்கள். எனவே, தண்ணீர் சூழ்ந்த வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சென்னையிலேயே வேறு இடங்களில் இருந்தால் அவ்வப்போது போய் பார்த்து வருவது நல்லது. அப்படி வீட்டை பார்க்கப் போகும்போது நகையோ, பணமோ இருந்தால் அவற்றை கையோடு எடுத்துச் செல்வது மிகவும் நல்லது..வெளியூரில் இருந்தால், உள்ளூர் காவல் நிலையத்தினருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
வேளச்சேரி சாய்பாபா நகரில் மொட்டை மாடியில் தாங்கள் இருந்தபோதே, கீழே கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்ததாக கூறியுள்ளது ஒரு குடும்பம். தங்களது சத்தம் கேட்டு திருட்டுக் கும்பல் தப்பி ஓடிவிட்டதாக விவரித்துள்ளனர். காவல்நிலையத்தில் இதுவரை எந்த புகாரையும் கொடுக்கவில்லை.
எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்ற வகையில் திருடும் ஈரமில்லா மனிதர்களை கட்டுப்படுத்த, காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டியது அவசியம். தண்ணீர் சூழ்ந்திருக்கிறதே என்பதற்காக, அப்படியே விட்டுவிடாமல் படகில் சென்றாவது ரோந்து செய்ய வேண்டும் என்பது நமது கோரிக்கை..