வலுவான எதிர்காலத்துக்குத் தேசிய மக்கள் சக்தியே ஒரே தெரிவு! – அநுரகுமார செவ்வி.
“இலங்கையின் வலுவான எதிர்காலத்துக்குத் தேசிய மக்கள் சக்தியே அவசியம். வெறுமனே ஆட்சி மாற்றம் மாத்திரம் போதாது.”
இவ்வாறு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
‘இந்து’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“2022 இல் ராஜபக்ஷக்களைப் பதவியிலிருந்து அகற்றிய பின்னர் வாக்காளர்களுக்குத் தேர்தலில் வாக்களிப்பதற்கான முதலாவது சந்தர்ப்பம் அடுத்த வருடம் கிடைக்கவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது.
உண்மையான பொருளாதார நெருக்கடிக்கு ரணில் அரசு தீர்வைக் காணவில்லை.
ஊழலும் பொருளாதார சமத்துவம் இன்மையுமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம். நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்கக் கூடிய பொருளாதார திட்டமே அவசியம்.
நாடு கோரி நிற்கும் அமைப்பு முறை மாற்றத்துக்கு அரசியல் கட்சி அவசியம் இல்லை. தேசிய விடுதலை இயக்கமே அவசியம். இதனையே நாங்கள் நிறைவேற்ற முயல்கின்றோம்.
எங்கள் கட்சி ஜே.வி.பி., எங்கள் இயக்கம் தேசிய மக்கள் சக்தி. இதன் காரணமாகவே எங்களால் வெற்றி பெற முடியும் என நாங்கள் கருதுகின்றோம். நாட்டின் சமகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் எனக் கருதுகின்றோம்.
இந்தச் சூழமைவில் ஜே.வி.பி. சர்வதேசத் தொடர்புகளை விஸ்தரித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களை ஜே.வி.பி. மேற்கொண்டு வருகின்றது.” – என்றார்.
‘ஜே.வி.பி. தனது சீன ஆதரவு – மேற்குலக எதிர்ப்புக் கொள்கையிலிருந்து விலகியுள்ளதா?’ என்ற கேள்விக்கு, “உலகம் மாறிவிட்டது; எங்கள் கட்சியும் மாறிவிட்டது” – என்று அநுரகுமார எம்.பி. பதிலளித்தார்.