பாகிஸ்தான் தயாரித்த மருந்துகளில் நச்சுத்தன்மை.
உலகின் புதிய வட்டாரங்களில் நச்சுத்தன்மையுடனான திரவ மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.
அமெரிக்கா, கிழக்கத்திய மத்திய தரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கத்திய பசிபிக் ஆகிய உலக சுகாதார நிறுவன வட்டாரங்களில் இடம்பெற்று உள்ள நாடுகளில் திரவ மருந்துகள் நச்சுத்தன்மையுடன் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
அந்த மருந்துகள் பாகிஸ்தானில் உள்ள ஃபார்மிக்ஸ் லேபரட்டரீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை என்றும் அவற்றில் நச்சுத்தன்மை இருப்பது முதன்முதலில் டிசம்பர் 8ஆம் தேதி மாலத்தீவிலும் பாகிஸ்தானிலும் கண்டறியப்பட்டது என்றும் நிறுவனம் குறிப்பிட்டு உள்ளது.
நஞ்சாக மாறிய இந்த மருந்துகளால் டிசம்பர் 7ஆம் தேதி வரை ஆபத்தான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றபோதிலும் உலக நாடுகளுக்கு விழிப்புணர்வை ஊட்டும் எச்சரிக்கையை உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ளது.
குறிப்பாக, பாகிஸ்தான் நிறுவனம் 2021 டிசம்பருக்கும் 2022 டிசம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் தயாரித்த மருந்துகளைச் சோதிக்குமாறும் உலக நாடுகளை அது கேட்டுக்கொண்டது.
மாசடைந்த மேலும் சில மருந்துகள் ஃபிஜியிலும் லாவோசிலும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தத் திரவ மருந்துகளில் தேவையான அளவுக்கு மீறிய எத்திலீன் கிளைகோல் வேதிப்பொருள் கலந்திருப்பது சோதனையில் தெரிய வந்ததாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.
திரவ மருந்தின் உறைநிலையைத் தடுக்கப் பயன்படுத்தும் எத்திலீன் கிளைகோல் மற்றும் டைஎத்திலீன் அளவுக்கு அதிகமாக இருந்த சளி மருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் கவனத்திற்கு வந்தது. அதனை இந்திய நிறுவனம் ஒன்று தயாரித்து இருந்தது.
அதேபோல கடந்த ஆண்டு நச்சுத்தன்மையுடனான இருமல் மருந்துக்கும் காம்பியாவிலும் உஸ்பெகிஸ்தானிலும் குறைந்தபட்சம் 89 குழந்தைகள் உயிரிழந்ததற்கும் தொடர்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தோனீசியாவிலும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்ததை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்தது.
இந்தியாவிலும் இந்தோனீசியாவிலும் நச்சுத்தன்மையுடனான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதன் வரிசையில் தற்போது பாகிஸ்தான் மருந்தும் இணைந்து உள்ளது. 2022ஆம் ஆண்டு உலகளவில் ஏறக்குறைய 3,000 குழந்தைகள் மாண்டதற்கும் இந்த மருந்துகளுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது.