கிளிநொச்சியில் வெடிகுண்டு தொழிற்சாலை : 13 குண்டுகளுடன் 02 பேர் கைது
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் கிளைமோர் குண்டுகளைத் தயாரித்துக்கொண்டிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரும் மற்றுமொருவரும் கிளைமோர் குண்டுகளுடன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் தயாரித்த 13 பெரிய சக்திவாய்ந்த கிளைமோர் குண்டுகள் மற்றும் மேலும் 18 கிளைமோர் வெடிகுண்டு உறைகள் மற்றும் வெடிகுண்டு பாகங்களை காவல்துறை பயங்கரவாத தடுப்பு பிரிவு கண்டுபிடித்துள்ளது.
இந்த புலி உறுப்பினர் அரசாங்கத்தின் புனர்வாழ்வுத் திட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர், முல்லைத்தீவு சிவில் பாதுகாப்புப் படையில் இணைந்து சேவையாற்றியுள்ளர்.
முன்னாள் புலி உறுப்பினர் மன்னார் வேலங்குளத்தை வசிப்பிடமாகவும், அவரது நண்பர் கிளிநொச்சி நாச்சிக்குடா கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளனர்.
நண்பரது வீடு அமைந்துள்ள நாச்சிக்குடா கிராமத்தில் படகு பாகங்களை பழுதுபார்ப்பது மற்றும் பூந்தொட்டிகள் தயாரிக்கும் பட்டறையை நடத்தி வந்துள்ளனர்.
இதேவேளை, புலிகளின் முன்னாள் உறுப்பினரும் அவரது நண்பரும் கிளைமோர் வெடிகுண்டு தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நாச்சிக்குடா பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் குழு, அவர்களது வேலைத் தளத்தை ஆய்வு செய்தபோது, கிளைமோர் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பல வெளிப்புற உறைகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டன என்பதை அவர்கள் இருவரடமும் விசாரித்துள்ளனர்.
அதன்பின், அவர்கள் தயாரித்து மறைத்து வைத்திருந்த கிளைமோர் வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு பாகங்கள் ஆகியவற்றை போலீஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார், மற்றையவர் கிளிநொச்சி பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த ஆண்டு மாவீரர் தினத்தை முன்னிட்டு முன்னாள் புலி உறுப்பினர் நாச்சிக்குடாவில் மாபெரும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.