ஜேஎன்யு-வில் மாணவர்கள் போராடத் தடை!
தில்லியிலுள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திற்குள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது ரூ. 20,000 அபராதம் விதிக்கப்படும் அல்லது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தின் கட்டிடங்களிலிருந்து 100 மீட்டருக்குள் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜேஎன்யு மாணவர் சங்கம் இந்தத் தடைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த அக்டோபரில் தேசத்திற்கு எதிரான சொற்றொடர்கள் கல்லூரியின் மொழியியல் துறைக் கட்டடச் சுவரில் கிறுக்கப்பட்டிருந்ததால் எழுந்த சர்சையின் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாதி, மத வன்முறைகளைத் தூண்டும் விதமாகவோ, தேசத்திற்கு எதிரான கருத்துக்களையோ கொண்ட சுவரொட்டிகள் அல்லது துண்டுப்பிரசுரங்களை பரப்பினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
மேலும், கல்வி மற்றும் நிர்வாக வளாகங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உண்ணாவிரதப் போராட்டம், தர்ணா, குழுவாக சேர்ந்து போராட்டம் போன்றவற்றில் ஈடுபடுவது, வளாகங்களின் நுழைவாயில்களை முற்றுகையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ. 20,000 அபராதம் விதிக்கவோ, விடுதி அல்லது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்படவோ செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிர்வாகம் இயல்பாக செயல்படுவதற்கு இடையூறு அளிக்கும் விதமான எந்த செயலும் தண்டனைக்குறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாணவன் அவனது கல்விக் காலத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை தண்டனைகள் பெற்றால் கல்லூரியிலிருந்து நீக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டனை பெறும் மாணவர்கள் அபராதம் கட்டாதவரை தேர்வுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அளிக்கப்ப்பட்ட தண்டனைகள் குறித்த விவரங்கள் கல்லூரியின் வலைதளப்பக்கதில் பதிவேற்றப்படுவதோடு, பெற்றோருக்கும் தெரிவிக்கப்படும் எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.
இதுபோன்ற பிரச்னைகள் எழும் பட்சத்தில் தண்டனைகள் குறித்த முடிவுகளை கல்லூரியின் துணை வேந்தர் எடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.