தடையை நீக்ககோரி ஜனாதிபதிக்கு தமிழ் கட்சிகள் அவசர கடிதம்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி ஜனாதிபதிக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அவசர கடிதம் ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள தமிழ் தேசிய கட்சிகள் வருமாறு,
1)இலங்கை தமிழரசு கட்சி
2)அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்(தமிழ் தேசியமக்கள் முன்னணி)
3)புளொட்
4)ரெலோ
5)ஈ பி ஆர் எல் எப்
6)தமிழ்த் தேசிய முன்னணி
7)ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம்
இலங்கை அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளிற்கு எதிராக, மக்கள் மனித உரிமை மீறப்படும் செயற்பாடுகளை பாதுகாப்பதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து கலந்துரையாடி வருகின்றனர்.
அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இளங்கலைஞர் மண்டபத்தில் விசேட கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த யாழ் மாவட்டத்தில் உள்ள ஏனைய கட்சி பிரதிநிதிகள் அனைவரும் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள்.
இலங்கை அரசால் மனித உரிமை மற்றும் மக்களின் ஜனநாயக செயற்பாட்டிற்கு அரச பாதுகாப்பு தரப்பினராலும் காவல் துறையினராலும் அடக்கி ஒடுக்கப்படும் நிலை தீவிரமடைந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கு மூன்று நாட்களுக்குள் பதில் கிடைக்காவிடின் எதிர்கால திட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.