தமிழ் அரசு கட்சிக்குள் குழப்பம்… மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராகும் சம்பந்தன் !
இலங்கை தமிழ் அரசு கட்சியை மறுசீரமைப்பின் போது திருகோணமலை மாவட்டம் மற்றும் பல மாகாணங்களில் இருந்து பிரதிநிதிகளை தெரிவு செய்த முறை மிகவும் தவறானது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கடந்த 11 ஆம் திகதி கட்சியின் ஒழுக்காற்று குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் பல பகுதிகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒழுக்காற்று நிர்வாகி ஸ்ரீனிதம்பி யோகேஸ்வரனுக்கு சம்பந்தன் எம்.பி அறிவித்துள்ளார்.
தவிர, இலங்கை தமிழ் அரசு கட்சியின் கொழும்பு கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தன் எம்.பிக்கு மேலதிகமாக, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கைத் தமிழ் அரசு கட்சியில் மூத்தவர்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக ஐந்து மனுக்களை ஒழுக்காற்றுக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முறைகேடுகள் தொடர்பில் ஒழுக்காற்றுக் குழு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், தனக்கு ஆதரவான கட்சியினருடன் இணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சம்பந்தன் எம்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.