மெட்ரோ ரயிலில் மருத்துவ மாணவர் மாரடைப்பால் பலி
தில்லி மெட்ரோ ரயிலில் பயணித்த மருத்துவ மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணாவை சேர்ந்த மயங்க் அகர்வால்(வயது 25) என்ற மாணவர் தில்லி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர், பல்லப்கரில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் ஐ.எஸ்.பி.டி. நிலையத்துக்கு கடந்த சனிக்கிழமை பயணித்துக் கொண்டிருந்தார்.
ஜவஹர்லால் மெட்ரோ நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மயங்க் திடீரென்று ரயிலேயே சரிந்து விழுந்துள்ளார். ரயிலில் பயணித்த சக பயணி ஒருவர் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
தொடர்ந்து, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற மயங்கை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக மயங்க் அகர்வால் எந்தவித நோயாலும் பாதிக்கப்படவில்லை என்று அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் லக்னெள பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல், நவராத்திரி பண்டிகையின்போது குஜராத்தில் மட்டும் 24 மணிநேரத்தில் கர்பா நடனமாடிய 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.