கொடநாடு வழக்கு: நேரில் ஆஜராக எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம், அவரது சாட்சியங்களைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு விவகாரத்தில் தன்னை தொடா்புபடுத்தி தனபால் பேச தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலா் பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். அதில், அதிமுகவின் பொதுச் செயலா் என்ற முறையில் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தனபால், இந்த வழக்கில் என்னை தொடா்புபடுத்தி பொய்யான தகவல்களை பொது வெளியில் கூறி வருகிறாா்.
செல்வாக்கை குலைக்கும்…: அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், எனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனபால் இதுபோல பேட்டி அளித்து வருகிறாா். அவா் ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சிகளைக் கலைத்ததாக கைது செய்யப்பட்டவா். மேலும், தான் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளாா். எனவே, இந்த வழக்கில் என்னை தொடா்புபடுத்திப் பேச அவருக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடா்புபடுத்திப் பேச தனபாலுக்கு நிரந்தரத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.மேலும், இந்த வழக்கு சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக மாஸ்டா் நீதிமன்றத்துக்கு (உயா்நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி அந்தஸ்தைக் கொண்ட நீதிமன்றம்.) அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், “உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. எனது வீட்டில் சாட்சியத்தைப் பதிவுசெய்ய வழக்குரைஞா் ஆணையா் ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது எதிா்க்கட்சித் தலைவராக உள்ள எனக்குள்ள பாதுகாப்பு வழிமுறைகள் காரணமாக, உயா்நீதிமன்ற வளாகத்துக்கு வரும்போது, மற்ற வழக்காடிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இந்தச் சிக்கல்களைத் தவிா்ப்பதற்காகவே வழக்குரைஞா் ஆணையா் ஒருவரை நியமிக்க வேண்டும். மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜராவதை வேண்டுமென்றே தவிா்க்கவில்லை. அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றத் தயாராக இருக்கிறேன். வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க வேண்டுமென்ற இந்த மனுவை ஏற்காவிட்டால், அது எனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்” என மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, வழக்குரைஞா் ஆணையராக எஸ்.காா்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டாா். சாட்சியத்தை ஒரு மாதத்துக்குள் பதிவு செய்து, அதை அறிக்கையாக ஜன.12-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.