மக்களவைக்குள் அத்துமீறிய மர்ம நபர்கள் யார் – வெளியான பரபரப்பு தகவல்
நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறிய நபர்களால் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டது. 42 வயது பெண் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் மீதான தாக்குதலின் போது வீரமரணம் அடைந்தவர்களுக்கு இன்று நாடாளுமன்றம் கூடியதும் மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, சுமுகமாக மக்களை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, பார்வையாளர் மாடத்தில் இருந்து 2 பேர் சபைக்குள் திடீரென குதித்தனர். இருவரில் ஒருவர் சபாநாயகரை நோக்கியும் மற்றொருவர் நாடாளுமன்ற வளாகத்தின் மேஜை மீதேறியும் களேபரம் செய்தனர்.
மேஜை மீது குதித்து ஓடியவரை எம்பிக்கள் சுற்றி வளைத்தனர். ஜீன்ஸ் அணிந்து சென்ற நபர், தான் ஷூவில் மறைத்து வைத்திருந்த வண்ணப் புகை பட்டாசுகளை (கலர் பாம்) அங்கேயே வீசினார். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது. இதனையடுத்து அத்துமீறி நுழைந்த இருவரையும் காவலர்கள் பிடித்தனர். அவர்களிடம் இருந்து வண்ணப் புகை பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், அரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த 42 வயதான நீலம், மகாராஷ்டிரா லத்தூரில் வசிக்கும் 25 வயதான அமோல் ஷிண்டே என்பது தெரியவந்தது. நாடாளுமன்றத்திற்கு வெளியேவும் கலர் பாம்கள் வீசியுள்ளனர். மேலும், சர்வாதிகாரம் கூடாது என்ற முழக்கத்துடன் சபாநாயகரை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்றம் செல்லும் சாலைகள் மூடல்
இதனையடுத்து, நாடாளுமன்றம் செல்லும் வழிகள் முடக்கப்பட்டன. வேறு யாரேனும் உள்ளார்களா என நாடாளுமன்றத்தை சுற்றி சோதனை மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்றத்தை சுற்றி கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மைசூர் எம்.பி. பரிந்துரையில் இருவரும் நாடாளுமன்றம் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் அத்துமீறியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பு கேள்விகுறி: எதிர்க்கட்சிகள் கண்டனம்
பழைய நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு நாளன்று இச்சம்பவம் அரங்கேறியிருப்பது, பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒரு பேனா, செல்போன் கூட எடுத்துச் செல்ல முடியாத சூழலில், இது போன்ற சம்பவம் அரங்கேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.
மக்களவையில் அத்துமீறல்: சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்
இதனையடுத்து மீண்டும் மக்களவை கூடியது. அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, அத்துமீறல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். வெளியேறியது சாதாரண புகைதான் என்றும் புகை குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் ஓம் பிர்லா விளக்கமளித்தார்.