தடுப்பூசி போட்டுக்கொண்டு , முகக்கவசம் அணிந்துகொள்ள சிங்கப்பூர் மருத்துவர்கள் வலியுறுத்தல்.
ஆண்டு இறுதியில் வழக்கமாக அதிகரிக்கும் கடுமையான சுவாசத் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், மக்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் முகக்கவசம் அணிந்துகொள்ளவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சுவாசத் தொற்றுச் சம்பவங்களில் கொவிட்-19, சளிக் காய்ச்சல், சாதாரண சளி ஆகியவை தொடர்பான சம்பவங்களும் அடங்கும்.
சுவாசத் தொற்றுச் சம்பவங்கள் தற்போது 30% அதிகரித்திருப்பதாக மருந்தகக் குழுமங்கள் கூறுகின்றன. 120க்கு மேற்பட்ட தனியார் மருந்தகங்களை நடத்தும் ‘ஹெல்த்வே மெடிக்கல்’ குழுமமும் 55 தனியார் மருந்தகங்களை நடத்தும் ‘பார்க்வே ஷெண்டன்’ குழுமமும் இவ்வாறு தெரிவித்துள்ளன.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி டிசம்பர் 2ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சிங்கப்பூரின் 25 பலதுறை மருந்தகங்களில் அன்றாடம் சராசரியாக 2,970 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
ஆண்டின் இதே காலகட்டத்தின்போது 2018ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை பதிவான சுவாசத் தொற்றுச் சம்பவங்களின் ஐந்தாண்டு இடைநிலை எண்ணிக்கை 2,009ஆக இருந்தது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு முந்திய ஆண்டுகளில் தினசரி 3,000 முதல் 3,500 சம்பவங்கள் பதிவாகி வந்ததுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக கொவிட்-19க்கு எதிராக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் குறைவான கிருமித்தொற்று விகிதங்கள் பதிவாகி வந்தன.
கடுமையான சுவாசத் தொற்றுச் சம்பவங்கள் தொடர்பில் 20 விழுக்காட்டினருக்குப் பலதுறை மருந்தகங்கள் சிகிச்சை அளித்து வருகின்றன. எஞ்சியவற்றை 1,800 தனியார் மருந்தகங்கள் கையாளுகின்றன.
அதே வாரத்தில் 32,000க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டோர் 460 பேர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தோர் ஒன்பது பேர். இதனால் பொது மருத்துவமனைகளில் படுக்கைக்கான தட்டுப்பாடு கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கூட்டமான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடல் நலமில்லை என்றால் வீட்டில் இருக்கும்படியும் பயணத் திட்டங்கள் சுமுகமாக இருக்க, சளிக்காய்ச்சலுக்கான ஆக அண்மைய தடுப்பூசியையும் கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.